(Source: ECI/ABP News/ABP Majha)
பஞ்சம் தீர்க்க வந்த விவசாயிடம் லஞ்சம்; நெல் கொள்முதல் நிலைய அதிகாரி கைது!
உளுந்தூர்பேட்டை அருகே நெல் கொள்முதல் செய்ய வந்த விவசாயியிடம் ரூ 32,800 லஞ்சம் வாங்கிய கொள்முதல் நிலைய அதிகாரி குணசேகரனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைதுசெய்தனர்
கள்ளகுறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள திருநாவலூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே அவியனூரை சேர்ந்த விவசாயி ஏழுமலை என்பவர் உறவினர்கள் தனது விளைநிலங்கள் விதைத்த நெல்லை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். அந்த நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டுமென்றால் 1 ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் என்ற விதத்தில் 32 ஆயிரத்து 800 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார் இளநிலை உதவியாளர் குணசேகரன். முதல் தவனையாக 10,000 ரூபாயை லஞ்சமாக வாங்கியுள்ளார் , 'மீதமுள்ள தொகையை கொடுத்தால் தான் ரசீதை தருவேன்' என்று கண்டித்து கூறியிருக்கிறார்.
இதனால் மனமுடைந்த ஏழுமலை, பணத்துடன் வருவதாக திரும்பி வருவதாக கூறி புறப்பட்டுச் சென்று, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார். குணசேகரனை ஆதாரத்துடன் பிடிக்க எண்ணிய லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ஜேசுதாஸ் உடனான லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஏழுமலையிடம் கொடுத்தனுப்பியுள்ளனர். இவர் நேரடி கொள்முதல் நிலைய இளநிலை உதவியாளர் குணசேகரனை கையும் களவுமாக பிடித்துள்ளனர். விவசாயிகளிடம் அதிகாரி லஞ்சம் கேட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் கேட்டபோது, "கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த அவியனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது தம்பி விஜயகுமார் என்பவரும், அவருடைய மாமன் மகன் இருவரும் விவசாய நிலங்களில் விளைவித்த 665 நெல் மூட்டைகளை அறுவடை செய்து ஒரு மாதங்களுக்கு முன்பாக திருநாவலூரில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக எடுத்து வந்துள்ளனர். நெல்லை கொள்முதல் செய்யாமல் அதிகாரிகள் இழுத்தடித்துள்ளனர். இதனால் ஏழுமலையின் உறவினர்கள் மூவரும், 'இவ்வளவு நாட்களாக இழுத்தடித்துள்ளனர். மழையில் நனையும் நிலையில் உள்ளது' என்று ஏழுமலையிடம் கூறியுள்ளனர். அதனடிப்படையில் நெல் கொள்முதல் நிலையத்திற்குச் சென்று குணசேகரன் என்ற அதிகாரியிடம் பேசியுள்ளார் ஏழுமலை. முதலில் சிட்டா, அடங்கல் கேட்டிருக்கும் குணசேகரன் பின்னர், அதெல்லாம் வேண்டாம்.
நெல்லை நானே கொள்முதல் செய்கிறேன். ஆனால், ஒரு மூட்டைக்கு 50 ரூபாய் என மொத்தம் 32,800 ரூபாய் கொடுங்கள் என்று அவரிடம் கேட்டுள்ளார். முதல்கட்டமாக கையிலிருந்த 10,000 ரூபாயை அந்த அதிகாரியிடம் கொடுத்துள்ளார் ஏழுமலை கடந்த 24ம் தேதி நெல் மூட்டைகளை எடை போட்டுள்ளார்கள். 'மீதமுள்ள தொகையை தந்தால்தான் எடை போட்டதற்கான ரசீதை தருவேன்' என்று கூறியுள்ளாராம் குணசேகரன். இதனால் மனமுடைந்து போன ஏழுமலை, புகார் அளித்த ஏழுமலை என்பவரிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி லஞ்சம் கேட்ட அதிகாரியிடம் கொடுக்கச் சொன்னோம்.
அதை பெற்றுக்கொண்ட இளநிலை உதவியாளர் குலசேகரனை கையும் களவுமாக பிடித்து உள்ளோம். ரசாயனம் தடவியபடி கொடுத்தனுப்பிய பணம் மட்டுமின்றி, காலையிலிருந்து மதியம் வரை மற்ற விவசாயிகளிடமிருந்து லஞ்சமாக பெற்ற 27,500 ரூபாயையும் அவரிடமிருந்து பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளோம். குணசேகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளோம், என்றார்.