புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: ரூ.62 லட்சம் இழந்த நபர்! அதிர்ச்சி தரும் உண்மை! சைபர் கிரைம் எச்சரிக்கை!
புதுச்சேரி : ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் 62.95 லட்சம் ரூபாய் முதலீடு செய்த நபர் ஏமாற்றம்.

காரைக்காலை சேர்ந்த ஒருவரை, வாட்ஸ் ஆப்பில் தொடர்பு கொண்ட நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்றார். அதனை நம்பி, அந்த நபர் 62.95 லட்சம் ரூபாய் முதலீடு செய்த நிலையில் ஏமாற்றப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், மோசடி பணத்தில் 21 லட்சம் ரூபாய் மேற்கு வங்கம், பரத்புர் முரஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த சுவப்பான் குமார்கோஷ் மகன் சந்துகோஷ், 24; என்பவரது வங்கி கணக்கில் சென்றது தெரியவந்தது.
அதன்பேரில், காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் மேற்கு வங்காளம் சென்று விசாரித்தனர். அதில், சந்துகோஷின் தந்தையான ஆயுர்வேத மருத்துவர் சுவப்பான்குமார் கோஷ், (வயது 50) என்பவர் இந்த மோசடியில் தொடர்பில் இருப்பது தெரி யவந்தது. அதன்பேரில், சுவப்பான்குமார் கோஷை கைது செய்த போலீசார், அவரை நேற்று முன்தினம் புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், 2.5 கோடி ரூபாய் பண பரிமாற்றம் நடந்துள்ள வங்கி கணக்கின் உரிமையாளர் சந்துகோஷ் மற்றும் மோசடியில் தொடர்பில் உள்ளவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் கூறுகையில்,
ஆன்லைனில் வரும் விளம்பரத்தை நம்பி யாரும் மொபைல் ஆப்களில் முதலீடு செய்து பணத்தை ஏமாற வேண்டாம். பெரும்பாலும் இது போன்ற மோசடி ஆப்கள் வெளிநாட்டில் இருந்து இயக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக இதுபோன்ற பல்வேறு ஆப்களில் மக்கள் முதலீடு செய்து பல கோடி ரூபாய் இழந்து வருவது தெரிவித்தும், அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு மக்கள் மீண்டும் மீண்டும் பணத்தை முதலீடு செய்து இழந்து வருவது தொடர்கதையாக உள்ளது. ஆகவே, மொபைல் ஆப்கள் மூலம் ஆன்லைன் முதலீடு செய்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.
வங்கி OTP எண் சொல்லாதீங்க
மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது.
இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது




















