ரூ.21 ஆயிரம் கோடி ஹெராயின் கடத்தல்: கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை..!
ஹெராயின் கடத்தல் வழக்கில் கோவை வடவள்ளி அருண் நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (56) என்பவரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர்.
![ரூ.21 ஆயிரம் கோடி ஹெராயின் கடத்தல்: கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை..! NIA officials are investigating related to 21,000 crore heroin smuggling case at coimbatore ரூ.21 ஆயிரம் கோடி ஹெராயின் கடத்தல்: கோவையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/23/ba407c719e7c7739ea561f82c31b07b1_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கடந்த செப்டம்பர் மாதம் ஆப்கானிஸ்தானிலிருந்து ஈரான் வழியாக குஜராத்தின் முந்த்ரா அதானி துறைமுகத்துக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2,990 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டன. ‘முகத்திற்கு பூச பயன்படுத்தப்படும் டால்கம் பவுடர்’ எனும் பெயரில் போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன. ஒரு கண்டெய்னரில் 1999.57 கிலோ ஹெராயினும், மற்றொன்றில் 988.64 கிலோ ஹெராயினும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது. மேலும் போதைப் பொருள் பார்சலில் குறிப்பிடப்பட்டிருந்த விஜயவாடா முகவரிக்கு சென்று அங்கு வசித்து வந்த துர்கா, அவரது கணவர் சுதாகர் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கில் கோவையை சேர்ந்த ராஜ்குமார் உள்ளிட்ட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையைச் சேர்ந்த சுதாகர் மற்றும் அவரது மனைவி துர்கா வைஷாலி விஜயவாடாவில் ஒரு இறக்குமதி நிறுவனத்தை நடத்தி வருவதும், ஈரானிலிருந்து பாண்ட்ஸ் பவுடர்களை இறக்குமதி செய்வதாகச் சொல்லி இந்த போதைப் பொருட்களைக் கடத்தியதும் தெரியவந்தது.
இது தொடர்பாக குஜராத்தை சேர்ந்த போதைபொருட்கள் குறித்து விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தை அதானி குழுமம் நிர்வகித்து வருவதால் போதைப்பொருள் கடத்தலில் அதானி குழுமத்திற்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இதனைத் தொடர்ந்து அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டது. அதில் எங்களுக்கும் இதற்கும் எந்த தொடர்புமே இல்லை என தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமை கையில் எடுத்துள்ளது. இது குறித்து இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 120 பி-யின் கீழ் கூட்டுசதி, போதை பொருட்கள் தடுப்பு சட்டம், சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஹெராயின் கடத்தல் வழக்கில் கோவை வடவள்ளி அருண் நகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (56) என்பவரும் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர். ராஜ்குமார் சென்னையில் உள்ள ராம்கோ சிமெண்ட் கம்பெனியில் பொது மேலாளராக பணி புரிந்து வந்துள்ளார். இவர் தற்போது கைது செய்யப்பட்டு, குஜராத் மாநிலம் பூஜ் சிறையில் உள்ளார். இந்நிலையில் ராஜ்குமாரின் தாயார் சுசீலா வசிக்கும் வடவள்ளி ராமசாமி நகர் பகுதியில் உள்ள வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மதியம் 12 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்ற இச்சோதனையில், ராஜ்குமாரின் வங்கி கணக்கு புத்தகம், செல்போன், லேப்டாப், பயணம் செய்த விபரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)