நெல்லையில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட கொலை குற்றவாளி உயிரிழப்பு - நடந்தது என்ன?
பேச்சித்துரையை போலீசார் காலில் மட்டுமே சுட்டபோதிலும் அன்று நடைபெற்ற சம்பவத்தின் போது அவர் போதையில் அங்குமிங்கும் ஓடியதில் உடலின் பிற இடங்களிலும் காயம் ஏற்பட்டிருப்பதாக போலீஸ்தரப்பில் தெரிவிக்கின்றனர்.
![நெல்லையில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட கொலை குற்றவாளி உயிரிழப்பு - நடந்தது என்ன? Nellai news Murder accused who was caught with a gunshoot died - TNN நெல்லையில் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட கொலை குற்றவாளி உயிரிழப்பு - நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/11/71c27fb00e01532919583d9489eeadcf1710134089391571_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நெல்லை மாவட்டம் தென்திருப்பவனத்தைச் சேர்ந்தவர் பேச்சித்துரை. இவர் மீது கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த ஏழாம் தேதி பட்டப்பகலில் பேச்சித்துரை மற்றும் அவனது கூட்டாளியான சந்துரு இருவரும் சேர்ந்து மது மற்றும் கஞ்சா போதையில் கையில் அரிவாளுடன் வீரவநல்லூர் பகுதியில் வலம் வந்துள்ளனர். சாலையில் சர்வ சாதாரணமாக அரிவாளுடன் பைக்கில் சென்ற இருவரும் கண்ணில் பட்டவர்கள் எல்லோரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குழி பகுதியில் சாலையில் பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பசாமி என்பவரிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் கருப்பசாமியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். முன்னதாக அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடியையும் அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினர்.
அதைத் தொடர்ந்து அருகில் உள்ள திருப்பிடைமருதூர் பகுதிக்கு சென்றபோது அரசு பேருந்து ஒன்றை வழிமறித்து ஓட்டுநரை வெட்ட முயற்சித்தனர். பின்னர் பேருந்து கண்ணாடிகளை சேதப்படுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட போது வீரவநல்லூர் காவல் நிலையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்ற காவலர் இருவரையும் பிடிக்க முற்பட்டுள்ளார். அப்போது காவலர் செந்தில்குமரையும் அரிவாளால் கையில் வெட்டி விட்டு இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதற்கிடையில் தகவல் அறிந்த போலீசார் இருவரையும் தேடிய நிலையில் அருகே உள்ள தோட்டத்தில் பேச்சித்துரை மற்றும் சந்துரு இருவரும் பதுங்கி இருந்துள்ளனர். இருவரையும் போலீசார் பிடிக்க சென்றபோது போலீசாரை மீண்டும் அவர்கள் தாக்க முற்பட்டுள்ளனர். இதையடுத்து போலீசார் பேச்சித்துரையை அதிரடியாக துப்பாக்கியால் கால் மூட்டுக்கு கீழ் சுட்டு பிடித்தனர். மேலும் தப்பி ஓடிய சந்துருவையும் போலீசார் கைது செய்தனர். இந்த ரகளை சம்பவத்தில் காயம் ஏற்பட்ட காவலர் செந்தில்குமார் மற்றும் துப்பாக்கியால் சுடப்பட்ட குற்றவாளி பேச்சுத்துறை இருவரும் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அன்று இரவு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் மருத்துவமனைக்கு நேரில் சென்று காவலரிடம் நலம் விசாரித்தார். இச்சம்பவம் அன்றைய தினம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் பேச்சுத் துரையை என்கவுண்டர் செய்துவிட்டதாக அப்போது தகவல்கள் உலா வந்தன. குறிப்பாக துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட பேச்சுத்துரையின் நிலை என்ன என்பது குறித்து போலீசார் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலையும் தெரிவிக்காமல் இருந்தனர். இதனால் பதட்டம் அதிகரித்த நிலையில் இரவு பேச்சித்துரையை காலில் காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து வந்த பிறகே என்கவுண்டர் நடைபெறவில்லை என்பது தெரியவந்தது. இந்த நிலையில் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரவுடி பேச்சித்துரை சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்து விட்டார்.
பேச்சித்துரையை போலீசார் காலில் மட்டுமே சுட்டபோதிலும் அன்று நடைபெற்ற சம்பவத்தின் போது அவர் போதையில் அங்குமிங்கும் ஓடியதில் உடலின் பிற இடங்களிலும் காயம் ஏற்பட்டிருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கின்றனர். அதேசமயம் இச்சம்பவம் நடைபெற்ற மறுநாளே போலீசார் வயல் பகுதிக்குள் பேச்சித் துரையை தாக்கியது போன்ற வீடியோவும் வெளியானது. இது போன்ற சூழ்நிலையில் பேச்சுதுரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)