மேலும் அறிய
வீட்டில் இருந்த 70 பவுனில் 16 பவுன் மட்டும் கொள்ளை: கன்னியாகுமரி இரட்டை கொலையில் வலுக்கும் சந்தேகம்!
முட்டம் பகுதியில் ஆள் அரவமற்ற பல ஏக்கர் விவசாய நிலத்திற்கு நடுவே அமைந்துள்ள பங்களா வீட்டில் ஆன்றோ சகாயராஜின் மனைவி பவுலின்மேரி, தாயார் திரேசம்மாள் ஆகியோர் தனியாக வசித்து வந்துள்ளனர்.

திரேசம்மாள் மற்றும் பவுலின்மேரி
கன்னியாகுமரியில் நடைபெற்ற இரட்டை கொலை அம்மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் மீனவ கிராமத்தை சேர்ந்த ஆன்றோ சகாயராஜ் என்பவர் வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருக்கு அலன், ஆரோன் என இரண்டு மகன்களும் உள்ளனர். இவர்களில் அலன் தந்தையுடன்
வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். ஆரோன் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
இதனால் முட்டம் பகுதியில் ஆள் அரவமற்ற பல ஏக்கர் விவசாய நிலத்திற்கு நடுவே அமைந்துள்ள பங்களா வீட்டில் ஆன்றோ சகாயராஜின் மனைவி பவுலின்மேரி, தாயார் திரேசம்மாள் ஆகியோர் தனியாக வசித்து வந்துள்ளனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவு இருவரிடமும் உறவினர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ள நிலையில் மீண்டும் நேற்று காலை அழைத்துள்ளனர்.
ஆனால் யாரும் போன் எடுக்காத நிலையில் உறவினர்கள் மதியம் நேரடியாக வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது வீட்டின் கதவு பூட்டிய நிலையில், ஆள் நடமாட்டமின்றி காணப்பட்டதால் சந்தேகமடைந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கு பவுலின் மேரி மற்றும் திரேசம்மாள் வீட்டின் நடுவில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.
உடனடியாக உறவினர்கள் வெள்ளிச்சந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளிச்சந்தை போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து நெல்லை சரக டிஐஜி பிரவேஷ் குமார், எஸ்.பி.ஹரி கிரண் பிரசாத் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்ததோடு கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் பங்களா வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் முதலில் வீட்டிற்கு வெளியே இருந்த மின்சார மீட்டரை உடைத்து மின்சாரத்தை துண்டித்து விட்டு பின்னர் வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்த அயன்பாக்ஸால் தாய் மற்றும் மகளை தலையில் கொடூரமாக தாக்கி கொலை செய்து விட்டு பவுலின் மேரி கழுத்தில் கிடந்த 11 சவரன் தாலி சங்கிலி , தாய் திரேசம்மாள் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க சங்கிலி, என மொத்தம் 16 சவரன் தங்க நகைகளை எடுத்துவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
ஆனால் இருவரின் மற்ற நகைகளையும் திருடாமல் சென்றுள்ளனர். அதேசமயம் வீட்டில் 70 சவரனுக்கும் மேற்பட்ட தங்க நகைகள் இருந்த நிலையில் அதனை எடுக்காமல் சென்றது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதனால் மர்ம நபர்கள் கொள்ளையடிக்க திட்டம் போட்டு தாயும் மகளையும் கொலை செய்தார்களா இல்லை, வேறேதுவும் காரணமாக என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரட்டை கொலை சம்பவத்தில் மர்ம நபர்களை பிடிக்க குளச்சல் உட்கோட்ட டிஎஸ்பி தங்கராமன் மேற்பார்வையில் 5 தனிப்படைகளை அமைத்து நெல்லை சரக டிஜஜி பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















