Crime: தடுக்கப்பட்ட குழந்தை திருமணம்! 16 வயது சிறுமியை கோடாரியால் கொலை செய்த இளைஞன் - பெரும் பரபரப்பு
Karnataka: கர்நாடகத்தில் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட 16 வயது சிறுமியின் தலையை இளைஞர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்புடுத்தியுள்ளது.
இந்தியாவில் 18 வயதுக்கு குறைவான நபர்களுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றச்செயலாகும். ஆனாலும், ஆங்காங்கே பல இடங்களில் சட்ட விரோதமாக குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று வருகிறது.
தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமணம்:
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள சூர்லாப்பி என்ற கிராமத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி முடித்த 16 வயது நிரம்பிய மீனா என்ற சிறுமியை அதே மாவட்டத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்ற 32 வயதான நபருக்கு திருமணம் செய்து வைக்க இரு குடும்பத்தினரும் முடிவு செய்தனர். இது தொடர்பான தகவல் எப்படியோ குழந்தை நல காப்பகத்திற்கு தெரியவந்தது.
தகவல் கிடைத்தவுடன் மே 9ஆம் தேதி நடைபெறவிருந்த நிச்சயதார்த்தத்தை குழந்தை நலத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதுடன், சிறுமி மீனாவுக்கு 18 வயது நிரம்பிய பின்னர் இந்த திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என இரு குடும்பத்தினரிடமும் தெளிவாக எடுத்துரைத்து திருமணத்தை நிறுத்தினர். மேற்கொண்டு திருமணத்தை நடத்த முயற்சி செய்தால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவீர்கள் என எச்சரித்தனர்.
சிறுமி வெட்டிக்கொலை:
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் நேரடியாக சிறுமி மீனாவின் வீட்டிற்குச் சென்று மீனாவின் பெற்றோர்களை மிகவும் மோசமாக தாக்கியுள்ளார். குறிப்பாக வீட்டில் இருந்த பொருட்களை எல்லாம் எடுத்து மீனாவின் பெற்றோர்களைத் தாக்கி பலத்த காயத்திற்கு ஆளாக்கிய பின்னர், மீனாவையும் கடுமையாக தாக்கி வீட்டில் இருந்து வெளியே இழுத்து வந்து தொடர்ந்து தாக்கியுள்ளார். மேலும், வீட்டில் மரம் வெட்ட வைத்திருந்த கோடாரியை எடுத்து மீனாவின் தலையில் தாக்கி, கொலையும் செய்துள்ளார். அதன் பின்னர் பிரகாஷ் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டார்.
தப்பியோடிய இளைஞர்:
இதுதொடர்பான தகவல் அறித்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கொலை செய்யப்பட்ட மீனாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், பிரகாஷால் கடும் தாக்குதலுக்கு உள்ளான மீனாவின் பெற்றோரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கொலை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்ட குற்றம் தொடர்பான வழக்குகள் பிரகாஷ் மீது பதியப்பட்டுள்ளது. இதனால் தலைமறைவாக உள்ள பிரகாஷை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட மீனாவுக்கு மொத்தம் மூன்று சகோதரிகள் மற்றும் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். சிறுமி மீனா கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் குடகு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.