Coronavirus Update: கொரோனா அச்சம்; மனைவியின் தலையை துண்டித்து, கணவரும் தற்கொலை
தனது மனைவிக்கு வந்த கொரோனா தொற்று, தனக்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில் மனைவியின் தலையை துண்டித்த கணவர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மனைவியின் தலையை துண்டித்து, கணவரும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் அதுல் லால். வயது 49 இவர், ரயில்வேயில் பணியாற்றி வருகிறார். முன்னாச்சக் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவி துலிகாவுடன் வசித்து வந்தார். மனைவிக்கு வயது 44.
இந்நிலையில், அவரது மனைவிக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, மருத்துவமனைக்கு சென்ற அவரை டாக்டர் பரிசோதித்து, கொரோனா பரிசோதனை செய்ய கூறினார். பரிசோதனையின் முடிவில், அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, துலிகா தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதனிடையே, அதுல் லால், தனது மனைவிக்கு வந்த கொரோனா தொற்று தனக்கு வந்து விடுமோ என்று அச்சத்தில் இருந்துள்ளார். இதே பீதியில் இருந்த அவர், தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்து, அவரின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை செய்தார். மனைவியை கொலை செய்து விட்டோமோ என்று மீண்டும் அச்சத்தில் இருந்த அதுல் லால், தனது அடுக்குமாடி குடியிருப்பின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவரது தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, மனைவி வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, கொரோனாவால் தான் இந்த சம்பவங்கள் நடைபெற்றதா? இல்லை வேறு எதாவது காரணங்கள் இருக்கிறதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரோனா தொற்றால் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ள நிலையில், கொரோனா தொடர்பாக இதுபோன்ற சம்பவங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.