“எத்தனை முறைதான் சாமிகிட்ட கேக்குறது?” - மனைவி, குழந்தைக்காக ஆத்திரத்தில் கோயில் சிலையை உடைத்த நபர் கைது
தன் மனைவிக்கும் தன் ஐந்து வயது குழந்தைக்கும் தொடர்ந்து உடல்நலக் குறைவு ஏற்பட்டு வந்த நிலையில், கோபத்தில் கடவுள் சிலையை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
தன் குடும்பத்தினருக்கு தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்த காரணத்தால், கோபத்தில் கடவுள் சிலைகளை சேதப்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசம், நொய்டாவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உளி சுத்தியல் கொண்டு சேதம்...
முன்னதாக திங்கள்கிழமை (மே.23) அக்கோயிலில் இருந்த மூன்று சிலைகள் சேதப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நேற்று முன் தினம் வழக்கு பதியப்பட்டு சிலையை சேதப்படுத்தியவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், மத்தியப் பிரதேசம், சட்டர்பூரைச் சேர்ந்த வினோத் குமார் எனும் நபர் தற்போது கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: Domestic Violence Rajasthan: தினமும் அடிக்கும் மனைவி.. வைரலான வீடியோ.. மனமுடைந்து நீதிமன்றத்தில் பாதுகாப்பு கேட்ட கணவர்!
அக்கோயிலுக்கென்று தனியாக பூசாரிகள் எவரும் இல்லாத நிலையில், இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிலைகளை சேதப்படுத்த வினோத் குமார் பயன்படுத்திய ஆயுதங்களும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
காரணம் என்ன?
தொடர்ந்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தன் மனைவியும், தன் ஐந்து வயது குழந்தையும் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வருவதாகவும், சமீபத்தில் தன் அன்புக்குரிய அத்தை உயிரிழந்ததால் தான் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், தான் இதுகுறித்து தொடர்ந்து கடவுளிடம் முறையிட்டும் தன் குடும்பத்தாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்
இந்நிலையில், வினோத் குமார் தான் சிலைகளை உடைத்ததை ஒப்புக் கொண்டுள்ளதாகவும், சுத்தியல், உளி போன்ற ஆயுதங்கள் அவரிமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், வழிபாட்டுத் தலங்களில் சேதம் விளைவிப்பது தொடர்பான இந்திய தண்டனை சட்டப்பிரிவு 295இன் கீழ் வினோத் குமார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இதேபோல் டெல்லியில் மழை பெய்யாத காரணத்தாலும், தாங்க முடியாத வெப்பநிலை காரணமாகவும் கடவுள் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி: விபரீதத்தில் முடிந்த உருவக்கேலி.. நண்பனே எமனான பயங்கரம்.. மாணவர் கொலை வழக்கில் திருப்பம்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்