மாந்தீரிகம் செய்ததாக சந்தேகம்.. தாயை உயிரோடு கொளுத்திய மகன்.. தெலங்கானாவில் பயங்கரம்!
கடந்த அக்டோபர் 10ம் தேதி கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான 40 வயது பெண் கர்ரே சாயம்மா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தெலங்கானா மாநிலத்தில் மாந்தீரிகம் செய்ததாக கூறி தன் தாயை இளைஞர் எரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிரோடு எரிக்கப்பட்ட பெண் பலி
இந்த சம்பவம் தெலங்கனா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மேடக் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. அங்குள்ள கிராமம் ஒன்றில் ஆட்டோ ஓட்டுநரான கரே துர்கேஷ் என்ற 21 வயது இளைஞர் தான் இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். கடந்த அக்டோபர் 10ம் தேதி கடுமையான தீக்காயங்களுக்கு உள்ளான 40 வயது பெண் கர்ரே சாயம்மா என்ற பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
முதலில் இது தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் கருதினர். ஆனால் தடயவியல் துறையினரின் ஆய்வில் அப்பெண் மீது இருந்தது டீசல் என்பது கண்டறியப்பட்டது. அவருக்கு எப்படி டீசல் கிடைத்தது என்ற கோணத்தில் விசாரணை நடந்தபோது தான் மகன் துர்கேஷ் மீது போலீசாரின் சந்தேகப் பார்வை திரும்பியது.
மாந்தீரிகம் செய்ததால் கொலை
ஹைதராபாத்தில் இருந்து மேடக் மாவட்டத்தில் உள்ள தனது கிராமத்திற்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பு தான் துர்கேஷ் வந்துள்ளார். அவர் கடுமையான போதைக்கு அடிமையானவராக இருந்துள்ளார். அடிக்கடி தன் தாயுடன் சண்டை செய்துள்ளார். அவரை பிடித்து விசாரணை செய்ததில் தன் தாயை டீசல் ஊற்றி கொலை செய்ததை துர்கேஷ் ஒப்புக்கொண்டார். விவசாயக் கூலித் தொழிலாளியான தனது தாய் கர்ரே சாயம்மா மாந்திரீகம் போன்றஅமானுஷ்ய சடங்குகள் செய்வதாகம், இதன் காரணமாக தன்னுடைய கிராமத்தில் பல மரணங்கள் நிகழ்ந்ததாகவும், அவற்றிற்கெல்லாம் என் தாய் தான் காரணம் எனவும் கூறியுள்ளார்.
இதனை நிறுத்துமாறு சொல்லியும் அவர் கேட்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் கொலை செய்தேன் எனவும் போலீசாரிடம் துர்கேஷ் தெரிவித்துள்ளார். உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக வட்ட ஆய்வாளர் ரேணுகா மற்றும் டெக்மால் உதவி ஆய்வாளர் அரவிந்த் குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த போலீசார் பரிந்துரை செய்தனர். இதற்கிடையில் கர்ரே சாயம்மா உடல் ஜோகிபேட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
ரேணுகா மற்றும் அரவிந்த் குமார் நடத்திய விசாரணையில் கர்ரே சாயம்மா அப்படியான மாந்திரீக விஷயங்களில் எல்லாம் ஈடுபடவில்லை என அந்த கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். ஒருவேளை துர்கேஷ் மதுபோதையில் கொலை செய்து விட்டு தன் தாய் மீது பழி போடுகிறாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. துர்கேஷ் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















