நெல்லை: பள்ளிவாசலில் குழந்தையை கடத்தியவர் கேரளாவில் கைது - குழந்தையை எதற்காக கடத்தினார்..?
கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா பகுதியை சேர்ந்த உமர் பாரூக் (37) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ளது ஆற்றங்கரை பள்ளிவாசல். மிகவும் புகழ்பெற்ற இந்த ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் சென்று நேர்த்திக்கடனை செலுத்தி வருவது வழக்கம். குறிப்பாக நெல்லை மாவட்டத்தில் உள்ள மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்து தங்கியிருந்து வழிபாடு நடத்தி செல்வர். இந்த சூழலில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த சாகுல் ஹமீது, தனது மனைவி நாகூர் மீரா, குழந்தைகள் முகமது சபிக் (7), நஜிலா பாத்திமா (2 1/2) ஆகியோருடன் கடந்த 11 ஆம் தேதி ஆற்றங்கரை பள்ளிவாசலுக்கு சென்று உள்ளனர்.
தனது இரு குழந்தைகளுக்கு மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்த வந்த நிலையில் இரவு நேரமாகியதால் தனது குழந்தைகளுடன் தர்காவில் உள்ள திண்ணையில் தூங்கி உள்ளனர். பின்னர் 12.07.22 அன்று அதிகாலை தூங்கி எழுந்து பார்த்த போது தனது அருகே தூங்கிக் கொண்டிருந்த இரண்டரை வயது குழந்தை நஜிலா பாத்திமா காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் அதிகாலை 4 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை தோளில் தூக்கி கொண்டு நடந்து சென்று அருகே நிறுத்தி இருந்த காரில் கடத்தி செல்வது பதிவாகி இருந்தது. இந்த சூழலில் இது தொடர்பாக கூடங்குளம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் 13.07.22 அன்று குழந்தை திருச்செந்தூரில் மீட்கப்பட்டது. இந்த நிலையில் தனிப்படை அமைத்து குழந்தையை கடத்தியவரை தேடி வந்த நிலையில் அந்த நபர் கேரளாவில் இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன் பேரில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டு அத்தனிப்படை கேரளா சென்று இரண்டு வாரமாக தங்கியிருந்து தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு தகவல்களை சேகரித்து தேடி வந்த நிலையில் கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா பகுதியை சேர்ந்த உமர் பாரூக் (37) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குழந்தை அணிந்திருந்த நகைக்காக ஆசைப்பட்டு குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்ததுள்ளது. இந்த நிலையில் தனிப்படையினர் உமர் பாரூக்யை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது போன்று வேறு ஏதேனும் குற்ற சம்பவங்களில் இவருக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்