Madurai Train Accident: மதுரை கொடூர விபத்து..! லக்னோ செல்லும் சென்னை விமான நிலையம் வந்த உடல்கள் ..!
இன்று காலை 10.15-மணிக்கு சென்னை - லக்னோ விமானத்தில் 5 உடல்களும்,11.15 க்கு 4 உடல்களும் கொண்டு செல்லப்படுகிறது.
இந்தியாவின் பண்பாடு, பாரம்பரியம் மிக்க வரலாற்று சிறப்புள்ள சுற்றுலா தலங்களை கண்டுகளிக்க இந்திய ரயில்வே பாரத் கவுரவ் என்ற ஆன்மிக சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது. அனுபவம் வாய்ந்த சுற்றுலா நிறுவனம் மூலம் அதிகளவு ஆன்மீக சுற்றுலா ரயில்களை இயக்கியுள்ளது. இதன் மூலம் கோடிக்கணக்கான வருவாய் ரயில்வே நிர்வாகத்திற்கு கிடைத்துவருகிறது. பயணத்திற்கான இடம், சைவ உணவு, உள்ளூர் பேருந்து வசதி என பல்வேறு வசதிகளை பேக்கேஜிங் முறையில் செய்து கொடுக்கின்றனர்.
கோர விபத்து:
இப்படி தொடர்ந்து ஆன்மீக சுற்றுலா ரயில்கள் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தின் தென் மாவட்டத்திற்கு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், சிவகங்கை பிள்ளையார் பட்டி விநாயகர் கோயில் , இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் என மிக முக்கியமான இடங்களுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் லக்னோவில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வந்த சுற்றுலா ரயில் மதுரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது பயணிகள் சிலர் சமைக்கும் போது மினி சிலிண்டெர் வெடித்து பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. மதுரையில் ரயிலில் ஏற்பட்ட தீ விபதில் 9 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், "லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் ஆன்மீக சுற்றுலா ரயிலில் வந்த ரயிலில் தேனீர் வைத்த போது கேஸ் சிலிண்டர் வெடித்து 9 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை அதில் பலியான முதியவர்கள் இருவர் படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்போது தான் முழு விபரம் தெரியவரும்” என்றனர்.
லக்னோ செல்லும் உடல்கள்:
உயிரிழந்தவர்களின் உடல்கள் மதுரையிலிருந்து நேற்று இரவு சென்னைக்கு சாலை மார்க்கமாக மூன்று ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு சற்று முன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. இன்று காலை 10.15-மணிக்கு சென்னை - லக்னோ விமானத்தில் 5 உடல்களும்,11.15 க்கு 4 உடல்களும் கொண்டு செல்லப்படுகிறது. 9 பேரின் உடல்களுடன் லக்னோ செல்லும் ரயில்வே காவல்துறை லக்னோவில் உள்ள மாவட்ட ஆட்சியர், எஸ்.பி யிடம் உடல்களை ஒப்படைக்க படுவார்கள் என கூறப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்
மதுரையில் நடைபெற்ற ரயில் விபத்திற்கு ரயில்வே பாதுகாப்பு துறையின் முழு தோல்வியை காரணம் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம் சாட்டினார். கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும் போது மதுரையில் நடைபெற்ற ரயில்வே விபத்தில் ஒன்பது பேர் இறந்துள்ளனர். 8 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். ரயில்வே துறையும், மாநில அரசும் நிவாரணங்கள் அறிவித்துள்ளன. இறந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். தீப்பிடிக்க கூடிய எந்த பொருளையும் ரயிலில் கொண்டு செல்லக்கூடாது.
ஆனால் கேஸ் சிலிண்டர்களோடு கடந்த பத்து நாட்களாக ஒரு பயணிகள் பெட்டி தென்னிந்தியா நெடுக பயணித்திருக்கிறது. எந்த ரயில் நிலையத்திலும் அந்த பெட்டி ஆய்வு செய்யப்படவில்லை. இந்த விபத்து மிகுந்த வேதனையாக உள்ளது. இந்த விபத்து ரயில் பயணத்தின் பொழுது நிகழ்ந்திருந்தால் எவ்வளவு பெரிய விபத்தாக மாறி இருக்கும், ரயில் நிலையத்திற்கு வந்த பிறகு நடந்துள்ளது. இதுவே ரயில் வந்து கொண்டிருக்கும்போது நடந்திருந்தால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு விபத்தில் சேதம் இருந்திருக்கும். இதற்கு ரயில்வே பாதுகாப்பு துறையின் தோல்வியே முழுக்காரணம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.