கிட்டி குமாரமங்கலம் கொலை: திட்டமிட்டு நிறைவேற்றியது அம்பலம்! தனிப்படை தீவிரம்!
கிட்டி குமாரமங்கலத்தின் இல்லத்தில் பணியாற்றிய வேலைக்காரப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், வீ்ட்டில் பணியாற்றிய 24 வயதான சலவைத் தொழிலாளி ராஜு என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவியும் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞருமான கிட்டி குமாரமங்கலம் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைச்சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் சேலம் மற்றும் திருச்சி தொகுதிகளின் எம்.பியாக இருந்தவர். இதோடு 1991 முதல் 1993 வரை மத்திய நீதி அமைச்சாராக ரங்கராஜன் குமாரமங்கலம் பதவி வகித்து வந்தார். பின்னர் 2000 ஆம் ஆண்டு ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மறைவிற்கு பிறகு டெல்லியில் உள்ள ஆனந்த் விஹார் பகுதியில் இவரது மனைவி கிட்டி குமாரமங்கலம் வசித்து வருகிறார். 67 வயதான இவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிவருகிறார். இந்நிலையில் தான் நேற்று கிட்டி குமாரமங்கலம் அவரது இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியில் உள்ள ஆனந்த விகார் பகுதியில் வசித்துவரும் கிட்டி குமாரமங்கலத்தின் இல்லத்தில் மஞ்சு என்ற வேலைக்காரப்பெண் பணியாற்றிவருகிறார். இதோடு கடந்த 5 ஆண்டுகளாக ராஜூ என்ற சலலைத்தொழிலாளியும் அங்கு பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் நேற்று இரவு சலவைத்தொழிலாளி ராஜூ மற்றும் அவருடன் 2 பேர் வீட்டின் கதவினைத்தட்டிய நிலையில், தெரிந்தவர்கள் தான் என்று கதவினை திறந்துள்ளார் வேலைக்காரப்பெண். ஆனால் இவர்கள் அப்பெண்ணினைத்தாக்கியதோடு, வீட்டினுள் ஒரு அறையில் வைத்து அடைத்து விட்டனர். இதனையடுத்து கிட்டி மங்கலத்தின் அறைக்குச் சென்ற மர்ம நபர்கள் தலையணையினை வைத்து முகத்தில் அழுத்தி அவரை கொலை செய்துள்ளனர். பின்னர் அறையில் இருந்த சூட்கேஸ் மற்றும் கதவினை உடைத்து கொள்ளையடித்து விட்டு தப்பிக்க முயன்றுள்ளனர். இதனைக்கண்ட வேலைக்காரப்பெண், சத்தமிட்டதையடுத்து பக்கத்து வீட்டார்கள் வந்து வேலைக்காரப்பெண்ணிற்கு உதவியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், என்ன நடந்தது என தடயவியல் துறையின் உதவியோடு விசாரணை நடத்தினர். பின்னர் கிட்டி குமாரமங்கலத்தின் இல்லத்தில் பணியாற்றிய வேலைக்காரப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், வீ்ட்டில் பணியாற்றிய 24 வயதான சலவைத் தொழிலாளி ராஜு என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் கொலை சம்பவத்தில், ராஜூவினைத்தவிர்த்து இன்னும் இருவருக்கு தொடர்புள்ளதாகவும், அவர்களின் பெயரையும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். எனவே கிட்டிகுமார மங்கலத்தின் கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரினை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
முன்னாள் மத்திய அமைச்சரின் மனைவி மற்றும் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞரின் இல்லத்திலேயே கொள்ளை சம்பவம் நடந்ததோடு, கிட்டி குமாரமங்கலத்தினையும் கொலை செய்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொலைக்கான உண்மை காரணம் குறித்தும், வேறு ஏதேனும் நிர்பந்தம் இருந்ததா என்றும் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.