’கிருஷ்ணகிரியில் புதைக்கப்பட்ட சென்னை ஆடிட்டர்’ விசிக நிர்வாகி உட்பட 9 பேர் கைது...!
கைது செய்யப்பட்ட 9 பேரிடமும் போலிசார் நடத்திய விசாரணையில் பணத்திற்காக ஆடிட்டரை கொன்று மாந்தோப்பில் புதைத்தது தெரிய வந்துள்ளது
![’கிருஷ்ணகிரியில் புதைக்கப்பட்ட சென்னை ஆடிட்டர்’ விசிக நிர்வாகி உட்பட 9 பேர் கைது...! Krishnagiri Chennai auditor murdered Nine people, including a Liberation Tigers of Tamil Eelam (LTTE) executive and a lawyer, have been arrested ’கிருஷ்ணகிரியில் புதைக்கப்பட்ட சென்னை ஆடிட்டர்’ விசிக நிர்வாகி உட்பட 9 பேர் கைது...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/01/c52afd04e8dc34104ee855ee1a9c1190_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான் (48). கடந்த 27 ஆம் தேதி காரில் கிருஷ்ணகிரிக்கு வந்த இவர் திடீரென காணாமல் போனார். இது குறித்து அவரது மனைவி பூர்ணிமா பிரதான் கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணகிரி நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் பண விவகாரத்தில் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதானை கொலை செய்து, கிருஷ்ணகிரி மாவட்டம் சாமல்பட்டி பகுதியில் உள்ள கொல்லப்பட்டி கிராமத்தில் மாந்தோப்பில் உடலை புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆடிட்டரின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்தினார்கள்.
ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான் சென்னையில் இருந்து கடந்த 26-ந் தேதி காரில் வந்துள்ளார். அவருடன் வக்கீல் கிருஷ்ணகுமார் என்பவரும் வந்தார். இவர்களின் நண்பர் சபரீஷ் மற்றொரு காரில் வந்தார். இவர்கள் வேலூரில் வேலையை முடித்துக் கொண்டு கிருஷ்ணகிரிக்கு வந்தார்கள்.இதன் பிறகு தான் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதான் மாயமானதால் அவருடன் வந்த வக்கீல் கிருஷ்ணகுமார், நண்பர் சபரீஷ் ஆகியோரிடம் காவல்துறையினர் முதற்கட்ட விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 2 நபர்களும் நண்பர்களுடன் சேர்ந்து பண விவகாரத்தில் ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதானை கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கொலையில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் பிடிக்க மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி உத்தரவிட்டார். அதன்பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில், கிருஷ்ணகிரியை சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளி, பெங்களூரு பிரமுகர்கள், கொலை செய்யப்பட்ட ஆடிட்டர் ஜனரஞ்சன் பிரதானுடன் பணிபுரிந்த சிலருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இந்த கொலையில் வக்கீல் கிருஷ்ணகுமார், சபரீஷ், திருமால், கோபி, சிவன், மணிவண்ணன் ஆகிய 6 பேரிடம் நேற்று முன்தினம் முதல் விசாரணை நடந்தது இந்த நிலையில் சாமல்பட்டியை சேர்ந்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜிம் மோகன் (42), மத்தூர் திருப்பதி (48), பெங்களூரு கே.ஆர்.புரா பிரசாந்த் (43), லோகா (47) ஆகிய 4 பேரையும் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைப்பெற்றது.
இந்த விசாரணையில் பணத்திற்காக நாங்கள்தான் கூட்டாக கொலை செய்தோம் என்று ஒப்புக்கொண்டனர். அதனை தொடர்ந்து பெரம்பலூர் சபரீஷ், மேட்டூர் கோபிநாத், பெரம்பலூர் மணிமன்னன், ஊத்தங்கரை தாலுகா கொடமாண்டப்பட்டி திருமால், பெங்களூரு பிரசாந்த், லோகநாதன், ஊத்தங்கரை சாமல்பட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஜிம் மோகன், மத்தூர் திருப்பதி, சென்னை தி.நகர் வக்கீல் கிருஷ்ணகுமார் ஆகிய 9 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)