தூக்கிடப்பட்டே உயிரிழந்துள்ளார் விஸ்மயா : ஆனால்..! என்ன சொல்கிறது போஸ்ட்மார்ட்டம் அறிக்கை..!
கேரள இளம்பெண் விஸ்மயா மர்மமான முறையில் இறந்த தகவலை அடுத்து, அதில் திருப்பமான ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதே நிரம்பிய இளம் பெண் விஸ்மயா மர்மமான முறையில் தன்னுடைய கணவர் வீட்டில் இறந்திருந்தார். இவருடைய மரணத்திற்கு கணவர் கிரண் குமாரின் குடும்பம் தான் காரணம் என்று குற்றம் சாட்டு பட்டு வருகிறது. மேலும் கிரண் குமார் காவல்துறையினரிடம் சரண் அடைந்துள்ளார். இந்நிலையில் விஸ்மயாவின் உடற்கூறு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கொல்லம் எஸ்பி ரவி,”மருத்துவர்கள் நடத்திய உடற்கூறு ஆய்வில் விஸ்மயா தூக்கில் தொங்கி இறந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனினும் அவரை யாரும் கொலை செய்து தூக்கில் இட்டார்களா, தற்கொலையா என்பது குறித்து விரிவான உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தவுடன் தான் தெரிய வரும்” எனக் கூறியுள்ளார்.
இவருக்கும் கொல்லம் மாவட்டம் சாஸ்தம்கோட்டா பகுதியைச் சேர்ந்த கிரண் குமாருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது கிரண் குமாருக்கு அவரது பெற்றோர் 100 பவுன் தங்கநகைகள், ஒரு டொயோட்டா யாரிஸ் கார் மற்றும் ஒரு ஏக்கர் நிலம் ஆகியனவற்றை வரதட்சனையாகக் கொடுத்துள்ளனர். கிரண் குமார் மோட்டார் வாகனத் துறையில் அதிகாரியாக இருக்கிறார்.தனக்கு வாங்கிக் கொடுக்கப்பட்ட யாரிஸ் காரின் மைலேஜ் சரியில்லை என்று கூறி அந்தக் காருக்குப் பதிலாக விஸ்மயா குடும்பத்தினரிடமிருந்து பணம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அடிக்கடி மனைவி விஸ்மயாவை துன்புறுத்தியும் வந்துள்ளதாக தெரிகிறது. இந்தச் சூழலில் திடீரென்று விஸ்மயாவின் மரணம் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விஸ்மயாவின் கணவர் கிரண் குமார் கொல்லம் காவல்துறையில் சரண் அடைந்துள்ளார். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், “இரண்டு நாட்களுக்கு முன்பாக எங்கள் இருவருக்கும் சண்டை நடந்தது உண்மை தான். ஆனால் தற்போது அவரை அடித்தது போல் காயங்களுடன் வரும் படங்கள் அனைத்தும் போலியானவை” எனக் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இவரை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர் படுத்தினர். இவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கிரண் குமார் மீது குடும்ப வன்முறை மற்றும் வரதட்சனை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டுவர வேண்டும் என்று விஸ்மயாவின் குடும்பத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.
குடும்ப வன்முறையா உடனே இந்த எண்ணை அழையுங்கள்..
குடும்ப வன்முறையை சகித்துக் கொண்ட காலங்கள் ஓயட்டும். கணவராலோ, கணவரின் குடும்பத்தாராலோ உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ துன்புறுத்தப்பட்டால் உடனடியாக த்வானி என்ற அமைப்பின் ஹாட்லைன் எண்ணை 1800 102 7282 தொடர்பு கொள்ளுங்கள். அல்லது 1098 என்ற வுமன் ஹெல்ப்லைனில் அழையுங்கள். இது 24 மணிநேரமும் இயங்கக்கூடியது. இந்த ஹெல்ப்லைன் காவல்துறை, மருத்துவமனை அல்லது தேவைப்படும் உடனடி உதவியை செய்யக்கூடிய அதிகாரம் உள்ளவர்களை இணைக்கும். ஒருவேளை நீங்கள் இந்த எண்ணை அழைத்துவிட்டு பேசமுடியாமல் போனாலோ அல்லது உங்களது அழைப்பை யாரேனும் துண்டித்துவிட்டாலோ கூட வுமன் ஹெல்ப்லைன் உங்களை மீண்டும் தொடர்புகொள்ளும். ஹெல்ப்லைன் ஊழியர்கள் உங்களைப் பற்றிய ரகசியம் காப்பர்.
மேலும் படிக்க: அதிர்ச்சிதரும் வாட்சப் சாட்.. குடும்பத்தினரின் கதறல் : கேரள இளம்பெண் விஸ்மயாவின் கணவர் போலீஸில் சரண்..!