சேட்ட... சேட்ட... திருடச் சென்ற ஹோட்டலில் ஆம்லெட், பீப் கறியை ருசித்த திருடன் கைது
கேரள மாநிலத்தில் ஹோட்டலுக்கு திருட சென்ற திருடன் சுடச் சுட ஆம்லெட், பீஃப் கறி சாப்பிட்டு விட்டு சொகுசாக பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருட்டு வேலைகள் செய்வதில் பலர் கைதேர்ந்தவர்களாக இருப்பதாக நினைத்து திருட்டு வேலையில் ஈடுபட்டு இறுதியில் போலீசாரிடம் சிக்கிக்கொள்வார்கள். அப்படி திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் என்னதான் உசாராக இருந்தாலும் இறுதியில் சிறையில் கம்பி என்னதான் வேண்டும். திருட செல்லும் இடங்களில் தாங்கள் செய்யும் செயல்களால் மிகவும் சுலபமாக போலீசாரிடம் சிக்கிக்கொள்வார்கள் .
அப்படிதான் கேரள மாநிலத்தில் ஹோட்டலுக்கு திருட சென்ற திருடன் சுடச் சுட ஆம்ப்லெட், பீஃப் கறி சாப்பிட்டு விட்டு சொகுசாக பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் சந்திர நகர் பகுதியில் அந்த ஹோட்டல் அமைந்துள்ளது. அந்த ஹோட்டலை வெகு நாட்களாக நோட்டம் விட்டு வந்த திருடர் சம்பவத்தன்று இரவு கடைக்குள் இறங்கியிருக்கிறார்.
திருடத்தான் வந்திருக்கிறோம் என்ற அச்சமோ, பதற்றமோ சிறிதும் இல்லாமல் ஹோட்டலுக்கு சென்ற திருடர் முதலில் சாப்பிட்டு விட்டு திருடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அங்கிருந்த முட்டைகளை எடுத்து ஆம்லெட் போட்டு சாப்பிட்டு விட்டு, குளிர்சாதனப் பெட்டியை திறந்து பார்த்திருக்கிறார். அதில் பீப் கறி இருப்பதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தவர் அதை வேக வைத்து உண்டு மகிழ்ந்துள்ளர். அதன் பின்னர் நிதானமாக ஹோட்டலை அலசி ஆராய்ந்து ஆய்வு செய்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றிருக்கிறார்.
இந்நிலையில், மறுநாள் ஹோட்டலுக்கு வந்த ஊழியர்கள் பணம் திருடு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, குற்றவாளி யார் என்கிற அடையாம் தெரியவந்தது. முதல்கட்ட விசாரணையில் ஊர், ஊராக சென்று திருட்டு வேலையில் ஈடுபட்டு வரும் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த ரப்பாயி அனிஷ் என்கிற சிவகுமார் என்பதை போலீசார் கண்டு பிடித்துள்ளனர். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அனிஷ் கைது செய்யப்பட்டுள்ளார். திருடித் திருடி பயத்தை தொலைத்த அனிஷ் வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டியுள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைக்கு மேல் இருந்த சிசிடிவியை கவனிக்காத திருடன் சுடச் சுட ஆம்ப்லெட் ,பீஃப் கறி சாப்பிட்டு விட்டு சொகுசாக பணத்தை திருடிச் சென்று போலீசாரிடம் சிக்கியது சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.





















