மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட 5 வயது சிறுமி உயிரிழப்பு - குளித்தலை அருகே சோகம்
வீட்டினுள் வந்த சிறுமி வாளியில் இருந்த சுடு தண்ணீரில் கையை வைத்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.
குளித்தலை அருகே சிவாயத்தில் மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிவாயம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மகள் கபிஷா வயது 5. ரங்கசாமி மனைவி பார்வதி தனது வீட்டில் சமையலறையில் குளிப்பதற்காக சுடு தண்ணீர் வாளியில் வாட்டர் ஹீட்டரில் தண்ணீரை சுட வைத்து விட்டு சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது வீட்டினுள் வந்த சிறுமி வாளியில் இருந்த சுடு தண்ணீரில் கையை வைத்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உடனே அவரது பெற்றோர் தங்களது பைக்கில் குளித்தலை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
இதனை அடுத்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் இருந்த குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்சாரம் பயந்து ஐந்து வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.