Karur: குளித்தலை அருகே விவசாய கிணற்றில் 16 வயது சிறுமி இறந்த நிலையில் மீட்பு
காதல் விவகாரத்தில் சிறுமி கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு.
குளித்தலை அருகே சவாரி மேட்டில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து 16 வயது சிறுமி இறந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதல் விவகாரத்தில் சிறுமி கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி சவாரி மேட்டை சேர்ந்தவர் தங்கராசு மகள் தேவிகா வயது 16. 15 வருடங்களுக்கு முன்பே தந்தையை இழந்த இவர் தனது தாய் மற்றும் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
இவர் நாமக்கல் மாவட்டம் வேல கவுண்டம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது ஒரு வருடமாக வீட்டில் இருந்து விவசாயக் கூலி வேலைக்கு சென்று வருகிறார்.
அவ்வாறு செல்லும்போது இவரது வீட்டின் அருகே வசிக்கும் நங்கவரம் பேரூராட்சி ஆறாவது வார்டு கவுன்சிலர் (திமுக ) செல்லாண்டி என்கிற குணசேகர் மகன் கஜேந்திரன் (16) ஆகிய இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடம் ஆக காதலித்து வந்துள்ளனர்.
ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இருவரின் இந்த காதல் விவகாரம் கஜேந்திரன் வீட்டிற்கு தெரிய வரவே அவரது குடும்பத்தினர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் கஜேந்திரன் குடும்பத்தினர் தேவிகாவை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மே 24ஆம் தேதி இரவு வீட்டிலிருந்த தேவிகாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் குறித்த தகவல் ஏதும் தெரியாததால் மே 25ஆம் தேதி அவரது குடும்பத்தினர் தேவிகாவை காணவில்லை என குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை சவாரி மேட்டில் உள்ள விவசாய கிணற்றில் இறந்த நிலையில் சடலமாக மிதந்துள்ளார். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குளித்தலை போலீசார் முசிறி தீயணைப்பு துறையினர் உதவியுடன் கிணற்றில் சடலமாக மிதந்த தேவிகாவின் உடலை வீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேவிகாவின் இறப்பிற்கு திமுக கவுன்சிலர் செல்லாண்டி என்கிற குணசேகர் அவரது குடும்பத்தினர் தான் காரணம் என்றும், தேவிகாவை அவர்கள் வரவழைத்து அவரைக் கொன்று கிணற்றில் வீசி உள்ளதாகவும், அவர்களை கைது செய்ய வேண்டுமென தேவிகாவின் உறவினர்கள் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மாயமான 16 வயது சிறுமி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காதல் விவகாரத்தால் தேவிகா கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்