பயங்கர பிளான்.. குழந்தை இல்லாததால் பெண் மருத்துவரை போட்டு தள்ளிய மாமனார், மாமியார்.. கணவர் சதி
குழந்தை இல்லாத காரணத்தால் பெண் மருத்துவரை அவரது மாமனார், மாமியார் இணைந்து கொலை செய்துள்ளனர். இதற்கு சதி திட்டம் தீட்டியதே மருத்துவரின் கணவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

குழந்தை இல்லாத காரணத்தால் பெண் மருத்துவரை அவரது மாமனார், மாமியார் இணைந்து கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மனைவியின் கொலையை விபத்து போல் சித்தரிக்க அவரது கணவரே சதி திட்டம் தீட்டியது காவல்துறை விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
பெண் மருத்துவரை போட்டு தள்ளிய மாமனார், மாமியார்:
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்த 2022ஆம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கொல்கத்தா மருத்துவர் சம்பவம் கடந்தாண்டு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பெலகாவியில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. குழந்தை இல்லாத காரணத்தால் பெண் மருத்துவரை அவரது மாமனார், மாமியார் இணைந்து கொலை செய்துள்ளனர். இதற்கு சதி திட்டம் தீட்டியதே மருத்துவரின் கணவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "மாமியார் ஜெயஸ்ரீ மற்றும் மாமனார் கமன்னா ஹோனகண்டே ஆகியோர் இதை ஒரு விபத்து போல சித்தரிக்க முயன்றனர். இருப்பினும், பின்னர் இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கொலை என்று கண்டுபிடிக்கப்பட்டது.
கணவரின் சதித் திட்டம் அம்பலம்:
தன்னுடைய மருமகள் டாக்டர் ரேணுகாவை மாமியார் ஜெயஸ்ரீ ஓடும் இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே தள்ளினார். பின்னர், மாமனார் கமன்னா கல்லால் தாக்கி உள்ளார். அதோடு நிற்காமல், ரேணுகாவின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
பின்னர், அந்த இருவரும் சேர்ந்து அவரது உடலை பைக்கில் கட்டி 100 மீட்டருக்கு மேல் இழுத்துச் சென்றனர். பைக் சக்கரத்தில் அவரது புடவை சிக்கி விபத்து நடந்தது போல் காட்ட முயற்சி செய்திருக்கின்றனர். கடந்த மே 18ஆம் தேதி, ரேணுகாவை ஜெயஸ்ரீ கோவிலுக்கு அழைத்துச் சென்ற பிறகு இந்த கொலை நடந்தது.
அன்று இரவு திரும்பி வரும் வழியில் ரேணுகா கொல்லப்பட்டிருக்கலாம். கமன்னா போலீஸை அழைத்து ஒரு விபத்தில் இறந்துவிட்டதாகக் கூறி இருக்கிறார். ஆனால், மருமகளுக்கு மட்டுமே காயங்கள் இருந்தன. மற்றவர்கள் காயமின்றி இருந்தனர். இதனால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
விசாரணையின் போது ஜெயஸ்ரீ மற்றும் கமன்னா கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்களின் மகன் சந்தோஷ் ஹோனகண்டே ரேணுகாவைக் கொல்லத் தூண்டியதாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
அவர்களின் திருமணம் ஆரம்பத்திலிருந்தே சிக்கலாகவே இருந்தது. கடந்த சில வருடங்களாக அவர்கள் பிரிந்து வாழ்ந்தனர். ரேணுகாவின் உடல்நிலை மற்றும் கருத்தரிக்க இயலாத காரணத்தால் சண்டைகள் ஏற்பட்டதாக உறவினர்கள் கூறுகின்றனர்" என்றார்.





















