Crime: நேற்று இரவு வீட்டிற்கு வராத நிலையில் இன்று குளத்தில் மிதந்த மீன்வியாபாரியின் உடல் ! குமரியில் பரபரப்பு !
மீன்வியாபாரி உடலில் காயங்களுடன் குளத்தில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
கன்னியாகுமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் ராஜகுமார்( 41 ). இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். மேலும் ராஜகுமார் அதே பகுதியில் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு மாலை வீட்டில் இருந்து கிளம்பி வெளியே சென்றுள்ளார். பின் நீண்ட நேரமாகியும் இரவு வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் வீட்டிற்கு வராத நிலையில் தக்கலை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று காலை முருங்கைவிளை பகுதியில் உள்ள ஒரு குளத்தில் ஆண் உடல் மிதப்பதை அங்கு குளிக்க சென்ற மக்கள் பார்த்து உள்ளனர், பின் இது குறித்து தக்கலை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் குளத்தில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்டனர். அப்போது விசாரணையில் நேற்று மாலை காணாமல் போன ராஜகுமார் உடல் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜகுமார் உடலில் காயம் இருந்துள்ளது. அதோடு குளத்தின் கரையில் ரத்த கறையும் படிந்து இருந்ததால் இது கொலையாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும் முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே ராஜகுமார் மீது அடிதடி உள்ளிட்ட சில வழக்குகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் முன்விரோதம் காரணமாக யாரேனும் அடித்து கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். மீன்வியாபாரி உடலில் காயங்களுடன் குளத்தில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,