வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து: கள்ளகுறிச்சியில் பாமகவினர் சாலை மறியல்.. பஸ் கண்ணாடிகள் உடைப்பு!
வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செய்ததை கண்டித்து நடந்த போராட்டத்தில் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டது.
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசயல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக, சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு அவசர, அவரசமாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட சட்டம் இயற்றுவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியுள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இந்த சட்டம் இயற்றப்பட்டதாகவும் நீதிமன்றம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில், வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் முன்னுரிமை அளிக்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. இதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தேர்தலை கருத்தில் கொண்டே இச்சட்டம் இயற்றப்பட்டதாக மனுதாரர்கள் தரப்பில் வாதாடப்பட்டது.
வன்னியருக்கு மட்டும் 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்றும், வன்னியர் பிரிவில் 7 சாதிகள் உள்ளதாகவும், இச்சட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் பாமக தரப்பில் வாதிடப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்நிலையில், அரசு தரப்பு வழக்கறிஞர் சண்முகசுந்தரம், இட ஒதுக்கீடு வழங்கியதற்கு வரலாற்று காரணாங்கள் உண்டு. முந்தைய அரசு கொண்டு வந்ததை இந்த அரசும் தொடரும் என தெரிவித்திருந்தோம். ஆனால் சட்டப்படி செல்லாது என அறிவித்துள்ளனர்.
இந்த உத்தரவைக் கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள், சாலை மறியல் ஆர்ப்பாட்டங்களில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் பேரவை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக , கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு சாலை பேருந்து நிலையம் அருகில் கள்ளகுறிச்சி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் பாமக நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் அவ்வழியாக வந்த அரசு நகர பேருந்துகளை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் அரசு பேருந்து முன் பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதமானது. மேலும், பேருந்து மீது கற்களை வீசி கண்ணாடி உடைத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரசு பேருந்தில் பாமகவினர் கற்களை வீசியதால் பேருந்தின் கண்ணாடி முழுவதும் உடைந்து உள்ளே இருந்த பயணிகள் மீது கண்ணாடி துண்டுகள் சிதறி விழுந்து கைகளை கிழித்துள்ளது. மேலும் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் தலையில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் பேருந்து குழந்தைகள் மீது கண்ணாடித் துகள்கள் பட்டு கையை கிழித்துள்ளது. இதனால் பேருந்தில் அந்த பயணிகள் பாதியிலே இறக்கிவிடபட்டனர்.