அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: கைதான 6 பேருக்கு 2 ம் தேதி வரை நீதிமன்ற காவல்
அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் கைது செய்யபட்ட நிர்வாகி உட்பட 6 பேரை 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு
விழுப்புரம்: குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் கைது செய்யபட்ட நிர்வாகி ஜீபின் பேபி, மரியா, சதீஷ்குமார் ஆகிய மூவரை 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலிலும், பணியாளர்கள் பிஜீமோகன், கோபிநாத்,அய்யப்பன் ஆகிய மூவரை 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டம் கெடார் அருகே உள்ள குண்டலபுலியூரில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் குன்றியோர், ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, 15க்கும் மேற்பட்டோர் காணாமல் போனது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வெளியானதால் அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகி ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின் மற்றும் ஆசிரம பணியாளர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடி மாற்றப்பட்டு சிபிசி ஐ டி போலீசார் விசாரனை செய்து வரும் நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க கோரி விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி புஷ்பராணி, ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தார்.
அதன் படி 8 பேரையும் சிபி சி ஐ டி போலீசார் 25 ஆம் தேதி விசாரனை செய்த போது முத்துமாரி, பூபாலன் மனநலம் பாதிப்பில் உள்ளதாகவும் இருவருக்கும் சிகிச்சை அளிக்க உத்தரவு வழங்க வேண்டுமென கேட்டிருந்தனர். அதன் படி கடந்த் 25ஆம் தேதி இருவரும் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு ஆசிரம நிர்வாகி ஜீபின் பேபி அவரது மனைவி மரியா ஜீபின் பணியாளர்கள் சதீஷ், கோபிநாத், அய்யப்பன், பிஜீமோகன் ஆகியோரிடம் விசாரனை நடத்தினர். நாளையுடன் விசாரனை முடிய உள்ள நிலையில் இன்றே விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆறு பேரை சிபிசி ஐ டி போலீசார் ஆஜர் படுத்தினர். அப்போது நீதிபதி புஷ்பராணி ஆஜர்படுத்தப்பட்ட ஜீபின் பேபி மரியா சதீஷ்குமார் ஆகிய மூவரை 2 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலிலும் பணியாளர்கள் பிஜீமோகன், கோபிநாத், அய்யப்பன் ஆகிய மூவரை 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்