13.5 கிலோ நகைகள் கையாடல்; மதிப்பு ரூ.6.5 கோடி - பெங்களூர் நகைக்கடை ஊழியர் கைது
தங்க நகைக் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 13.5 கிலோ தங்க நகைகளை கையாடல் செய்த நகைக்கடை ஊழியரை காவல் துறை கைது செய்தது.
கோவையில் உள்ள தங்க நகைக் கடைகளுக்கு விநியோகம் செய்ய வேண்டிய 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 13.5 கிலோ தங்க நகைகளை கையாடல் செய்த நகைக்கடை ஊழியரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு அன்மோல் ஜூவல்லரி என்ற மொத்த தங்க நகை செய்யும் கடை இயங்கி வருகிறது. கடந்த 25 வருடமாக இயங்கி வரும் இந்த கடை, கோவை மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள நகைக் கடைகளுக்கு தங்க நகை ஆபரணங்களை ஆர்டரின் பெயரில் தயாரித்து மொத்த விலையில் விற்பனை செய்து வருகிறது. இந்த நகைக் கடையில் மார்க்கெட்டிங் பிரிவின் மேலாளராக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சார்ந்த அனுமன் துவேசி என்பவர் பணியாற்றி வந்தார். இவர், ஆர்டரின் பேரில் கோவையில் உள்ள நகைக் கடைகளுக்கு பத்திரமாக நகைகளை ஒப்படைப்பது மற்றும் அதற்கான ரசீது பெற்று பெங்களூருவிற்கு பணம் பரிவர்த்தனை செய்யும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 8 ம் தேதி முதல் செப்டம்பர் 12 ம் தேதி வரை 13.5 கிலோ தங்க நகைகளை அனுமன் துவேசி, பெங்களூரில் இருந்து கோவையில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்ய கொண்டு வந்துள்ளார். அப்போது விநியோகம் செய்ய கொண்டு வந்த நகைகளை சமந்தப்பட்ட நகைக் கடைகளுக்கு தராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நகை கடை உரிமையாளர் சக்னால் காட்ரி விநியோகம் செய்யப்பட்ட நகைகளுக்கான பண பரிவர்த்தனை இன்னும் வரவில்லை என்பதை அறிந்து, அது தொடர்பாக அனுமன் துவேசியிடம் விளக்கம் கேட்டுள்ளார். அப்போது அவர் முறையாக பதிலளிக்காததால், நகைகளை கையாடல் செய்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில், அனுமன் துவேசி மீது நகை கடை உரிமையாளர் சக்னால் காட்ரி, கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், அவர் 13.5 கிலோ எடையுள்ள 6.5 கோடி மதிப்பிலான தங்கத்தை கையாடல் செய்ததாகவும், அனுமன் துவேசி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த வெரைட்டி ஹால் காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அனுமன் துவேசி நகைகளை கையாடல் செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, காவல் துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கடையின் கடையின் முன்னாள் ஊழியரான தல்பத் சிங் என்பரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். 13.5 கிலோ மதிப்பிலான நகைகளை எப்படி கையாடல் செய்தார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்