Nanguneri Incident: பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்திற்கு நிதி உதவி.. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்க உத்தரவு!
பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளும் அரசு செய்ய தயாராக இருப்பதாகவும், மேலும் அடுத்த கட்ட நிதியையும் உடனே பெற்று தர நடவடிக்கை எடுப்பதாகவும் அரசு தரப்பில் உத்தரவாதம்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளி முனியாண்டி அம்பிகாபதி தம்பதியருக்கு +2 படிக்கும் மகன் மற்றும் 9 வது வகுப்பு படிக்கும் மகள் ஆகியோர் உள்ளனர். இவர்கள் பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்கள். நாங்குநேரியைச் சேர்ந்த இருவரும் வள்ளியூர் (கண்கார்டியா )அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். இதே பள்ளியில் படிக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கும் நாங்குநேரியை சேர்ந்த பிளஸ் டூ மாணவனுக்கும் இடையே சிறிய சிறிய பிரச்சினைகள் இருந்து வந்துள்ளது இந்த நிலையில் அந்த பிரச்சனைகள் அனைத்தும் ஜாதி ரீதியான முதலாக மாறி முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நாங்குநேரியைச் சேர்ந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிளஸ் டூ மாணவரை சில மாணவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளிக்கு செல்ல மாட்டேன் என கூறி வீட்டில் இருந்துள்ளார். பின் தாயிடம் நடந்த அனைத்தையும் கூறி உள்ளார். உடனே தாய் அவரை சமாதானப்படுத்தி பள்ளிக்கு அழைத்து சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடமும் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் அந்த குறிப்பிட்ட மாணவர்களை அழைத்து தலைமை ஆசிரியர் கண்டித்ததாக தெரிகிறது. பின் மறுநாள் பள்ளிக்கு சென்ற நாங்குநேரியைச் சேர்ந்த மாணவனை புகார்க்குள்ளான மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் எப்படி எங்களை பற்றி புகார் செய்யலாம் என்று பிரச்சனை செய்துள்ளனர்.
பின் அன்று இரவு 9ம் தேதி வீடு புகுந்து ஒரு கும்பல் பிளஸ் டூ மாணவனை அரிவாளால் வெட்டியது. அப்போது அதை தடுக்க சென்ற அவரது தங்கைக்கும் கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு நாங்குநேரி போலீஸாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் வள்ளியூர் பள்ளியில் படித்து வந்த 17 வயதுடைய 12ம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் மற்றும் அதே பள்ளியில் படித்த இடைநின்ற இரண்டு சிறார் உட்பட ஆறு சிறார்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொலை முயற்சி உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து நெல்லை சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு தலைமையிலான கல்வித்துறை அதிகாரிகள் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவர்கள் இருவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து விட்டு சம்பவம் தொடர்பாக விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.
மேலும் பள்ளி மாணவர்கள் ஆயுதம் கொண்டு தாக்கப்பட்ட வழக்கில் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவின்படி விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அரசு உத்தரவின் பெயரில் ஆதித்திராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் பெனட் ஆசீர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிவாரண நிதியில் முதல் கட்டமாக 1,92,500 ரூபாயை பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் அம்பிகாபதியிடம் வழங்கினார். மேலும் அனைத்து உதவிகளும் அரசு செய்ய தயாராக இருப்பதாகவும், மேலும் அடுத்த கட்ட நிதியையும் உடனே பெற்று தர நடவடிக்கை எடுப்பதாகவும் அரசு தரப்பில் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது..