Kolkata Crime: மாந்திரீகர் கொடுத்த ஐடியா! 7 வயது சிறுமியை நரபலி கொடுத்த நபர்! கொல்கத்தாவில் பயங்கரம்!
கொல்கத்தாவில் 7 வயது சிறுமி கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி மாந்திரீகர் கூறிய ஆலோசனையின்படி கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கொல்கத்தாவில் 7 வயது சிறுமி கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளி மாந்திரீகர் கூறிய ஆலோசனையின்படி கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கொல்கத்தாவில் 7 வயது சிறுமி கடத்திச் சென்று கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஸ்ரீதர் ராய் சாலையில் வசிக்கும் 7 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுகிழமை காணவில்லை என புகார் எழுந்தது. சிறுமியின் குடும்பத்தினர் தில்ஜாலா காவல் நிலையத்தில் சிறுமி காணவில்லை என புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் அனைத்து வீடுகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். ஆனால் அந்த சிறுமி பற்றி தகவல் கிடைக்கவில்லை.
பின் சிசிடிவி காட்சியில் காணாமல் போன சிறுமி அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் ஒரு வீட்டிற்குள் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. அதனடிப்படையில் அக்கம் பக்கத்தினர் பக்கத்தில் இருக்கும் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்தபோது, காணாமல் போன சிறுமியின் உடல் சாக்கு மூட்டையில் அடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இரண்டாவது மாடியில் இருக்கும் அலோக் குமார் என்பவரின் அடுக்குமாடி குடியிருப்பில் சடலம் கண்டெடுக்கப்பட்டதை கொல்கத்தா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, பீகார் மாநிலம் சமஸ்திபூரை சேர்ந்த அலோக் குமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அலோக் குமாருக்கு குழந்தைபேறு கிடைக்கவேண்டும் என மாந்திரீகரை சந்திதத்தாகவும், அவர் வரும் நவராத்திரிக்குள் ஒரு குழந்தையை நரபலி கொடுத்தால் விரைவில் குழந்தை பிறக்கும் என தெரிவித்ததையடுத்து அலோக் அந்த சிறுமியை கொன்றதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
மாந்தீரிகர் கூறியதையடுத்து அலோக் குமார் 7 வயது சிறுமியை கடத்திச்சென்று அவரது வீட்டில் வைத்து கொலை செய்துள்ளார். போலீசார் கூறுகையில் சிறுமியின் உடலில் மற்றும் பிறப்புறுப்பில் காயங்கள் இருந்ததாக கூறினர். அலோக் குமாரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் மாந்திரீகரை தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல் துறையினரின் அலட்சியத்தால் தான் சிறுமியை கண்டுபிடிக்க முடியவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டினர். அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களும் அக்கம் பக்கத்தினரும் தில்ஜாலா காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர கூடுதல் பாதுகாப்பு படையினர் காவல் நிலையத்தில் போடப்பட்டுள்ளது. பொது மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் காவல் நிலையத்தின் கேட் மற்றும் கதவை மூடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு காவல் நிலையத்தில் இருக்கும் வாகனங்களை சேதப்படுத்தினர். சேதப்படுத்திய வழக்கில் ஒரு பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.