Crime : “எல்லாம் அதுக்காகத்தான்”.. காணாமல்போன மனைவியின் 17 சவரன் நகை.. ட்ராமா போட்ட ஆசாமி கைது..
நீண்ட நாட்களாக தனக்கு புல்லட் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், திருமணத்தின் போது வரதட்சணையாக புல்லட் பைக் கேட்கலாம் என நினைத்தேன்...
சென்னையில் புல்லட் வாங்க ஆசைப்பட்டு மனைவியின் நகைகளை விற்பனை செய்து விட்டு நாடகமாடிய கணவன் கைது செய்யப்பட்டார்.
வாழ்க்கையில் எல்லோருக்கும் எப்படியாவது கஷ்டப்பட்டு பைக்,கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அது புதிதாக இருந்தாலும் சரி, ஏற்கனவே பயன்படுத்தியதாக இருந்தாலும் சரி நினைத்தது நடந்து விட்டால் அந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இதற்காக கடினமாக உழைப்பவர்கள் ஒருபுறம் என்றால், மறுபுறம் குற்றச் செயல்களில் ஈடுபட்டு நினைத்ததை நிறைவேற்ற நினைப்பவர் மறுபுறம் இருக்கத்தான் செய்கிறார். அப்படியான ஒரு சம்பவம் தான் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை புதுப்பேட்டையை சேர்ந்த அப்துல் ரஷீத் என்பவர் ஏசி மெக்கானிக் தொழில் செய்வதோடு, பகுதி நேரமாக உணவு டெலிவரி செய்யும் பணியும் செய்து வருகிறார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கிண்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இதனிடையே கடந்த ஜூன் 25 ஆம் தேதி கணவன், மனைவில் இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் மாலையில் முதலில் அப்துல் ரஷீத் வீடு திரும்பியுள்ளார்.
பிறகு மனைவிக்கு போன் செய்து யாரோ மர்ம நபர்கள் வந்து வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகைகளை திருடிச் சென்று விட்டதாக கூறி புலம்பியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மனைவி உடனடியாக வீட்டுக்கு விரைந்துள்ளார். பின்னர் இருவரும் எழும்பூர் காவல் நிலையம் சென்று 17 சவரன் நகையை வேலைக்கு சென்ற நேரத்தில் யாரோ திருடி விட்டதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி புகார் அளித்தனர்.
இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்துல் ரஷீத் வீட்டுக்கு அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது சம்பவம் நடந்ததாக கூறப்படும் ஜூன் 25 ஆம் தேதி சந்தேகப்படும்படியாக யாரும் வந்து சென்றதாக காட்சிகள் பதிவாகவில்லை. ஆனால் இருவரும் வேலைக்கு சென்றதாக கூறப்படும் நேரத்தில் அப்துல் ரஷீத் மட்டும் மதியம் வந்து காட்சிகள் இடம் பெற்றதால் போலீசாருக்கு அவர் மேல் சந்தேகம் வலுத்தது.
இதனால் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். இதில் மனைவியில் 17 சவரன் நகைகளை திருடியதை அப்துல் ரஷூத் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து ஏன் இந்த திருட்டு நடந்தது என விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதில் நீண்ட நாட்களாக தனக்கு புல்லட் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்ததாகவும், திருமணத்தின் போது வரதட்சணையாக புல்லட் பைக் கேட்கலாம் என நினைத்தேன் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் அது நடக்காததால், நண்பர்கள் அனைவரும் புல்லட் பைக்கில் செல்வதைப் பார்த்து அதனை வாங்கியே தீர வேண்டும் என முடிவெடுத்தேன்.
அதற்கு பணம் இல்லாத நிலையில் மனைவியின் நகையை திருட முடிவு செய்தேன். அதன்படி மர்ம நபர்கள் நகையை திருடியதாக நாடகமாடினேன். திருடிய நகைகளை எனது சித்தப்பா மகன் முகமது சாயிடம் கொடுத்து விற்பனை செய்ய சொன்னேன். அவரும் விற்று ரூ.2.80 லட்சம் பணம் கொடுத்தார். முதலில் இது திருட்டு தான் என மனைவி நம்பினார். ஆனால் கடைசியில் சிசிடிவி கேமராவால் நான் மாட்டிக் கொண்டேன் எனவும் அப்துல் ரஷீத் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அப்துல் ரஷீத் மற்றும் திருட்டுக்கு உதவியதாக அவரது சித்தப்பா மகன் முகமது சாயிப் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். புல்லட் வாங்க ஆசைப்பட்டு மனைவியின் நகையை கணவன் திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்