கொதிக்க கொதிக்க ரசம்.. மனைவியுடன் தகராறு.. போலீஸை படுத்தியெடுத்த குடிமகன்.. நடந்தது இதுதான்..
ஒருமுறை செஞ்சி நான்குமுனை சந்திப்பில் நின்று தனது கழுத்தை தானே பிளேடால் அறுத்துக்கொண்ட நடராஜன், தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்துள்ளார்.
விழுப்புரம் அருகே கொதிக்கும் ரசத்தை மேலே ஊற்றிய மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கணவர் போலீசாரை பாடாய்படுத்திய சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு குப்பம்மாள் என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ள நிலையில், நடராஜன் செஞ்சியில் பேருந்துகளில் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கூலி வேலை செய்து வருகிறார். இதற்கிடையில் அவர் தினமும் தான் சம்பாதிப்பதை வீட்டிற்கு கொண்டு வராமல் குடிக்கு அடிமையாகியுள்ளார். இதனால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.
இப்படியான சமயங்களில் ஒருமுறை செஞ்சி நான்குமுனை சந்திப்பில் நின்று தனது கழுத்தை தானே பிளேடால் அறுத்துக்கொண்ட நடராஜன், தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்துள்ளார். ஆனாலும் திருந்தாத அவர், அடுத்தக்கட்டமாக பேருந்து நிலையத்தில் தண்ணீர் பாட்டில் விற்பனை செய்வது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் மீண்டும் கழுத்தை பிளேடால் அறுத்துக் கொண்டார்.
இதனிடையே கடந்த ஜூன் மாதம் கணவன், மனைவிக்குள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. முன்னதாக செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடராஜன் மீது குப்பம்மாள் புகாரளித்தார். போலீசார் அவரை 2 முறை அழைத்து எச்சரித்து அனுப்பினர். ஆனால் கணவர் கொடுமை தாங்க முடியாத நிலையில் இம்முறை குப்பம்மாள் முந்திக்கொண்டு கொதிக்கும் ரசத்தை நடராஜன் மீது ஊற்றியுள்ளார்.
இதில் முகம் வெந்த நிலையில் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செஞ்சி காவல் நிலையம் முன்பு நடராஜன் போராட்டம் நடத்தினார். அவரை சமாதானப்படுத்திய போலீசார் இரண்டு மணி நேரம் போராடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்நிலையில் காயங்கள் லேசாக ஆறிய நிலையில் மனைவி மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் அடுத்த ஆயுதத்தை கையில் எடுக்க தயாரானார். நேராக செஞ்சி காவல் நிலையம் சென்ற அவர், அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதோடு தன்மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் நடராஜன் மீது தண்ணீர் ஊற்றி அந்த முயற்சியை முறியடித்தனர்.
ஆனால் கடுப்பான அவர், அங்கிருந்து சென்று விட்டு மீண்டும் போதை தலைக்கேறிய நிலையில் மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் உடைந்த நிலையில் மதுபாட்டில் இருந்துள்ளது. அதைக் கொண்டு நடராஜன் தனது கழுத்தை அறுக்க முயன்றார். அவரது இந்த முயற்சியையும் முறியடித்த போலீசார் இப்படி அடிக்கடி தற்கொலை முயற்சியை அரங்கேற்றும் நடராஜனை என்னசெய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கியுள்ளனர். இந்த சம்பவம் செஞ்சி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்