பொள்ளாச்சி அருகே கணவன் கொலை: மனைவி, சித்தப்பா கள்ளக்காதல்! அதிர்ச்சி வாக்குமூலம்!
கொலை செய்யப்பட்டவரின் வீடு அருகே ஆம்புலன்ஸ் வந்து சென்றது தெரியவந்ததை. தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் கரூர் பகுதியைச் சேர்ந்தது என்றும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள தாமரைக் குளம் அரசமரத்து விநாயகர் கோயில் அருகே வசித்து வந்தவர் தேவா (எ) ரித்தீஷ். 27 வயதான இவர் கூலித்தொழில் செய்து வந்துள்ளார். இவரது மனைவி இந்திராணி (26).மதுரையைச் சேர்ந்த இத்தம்பதியினருக்கு திருமணம் நடந்து 5 ஆண்டுகள் ஆகிறது, மூன்று வயதில் ஒரு ஆண் குழந்தையும் இவர்களுக்கு உள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தேவா காணாமல் போய்விட்டதாக அவரது தாயார் சுசீலா, கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து தேவாவின் மனைவியான இந்திராணியிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படும் எனவும், அதனால் அவர் வீட்டை விட்டு வெளியே போயிருக்கலாம் எனவும் இந்திராணி தெரிவித்திருக்கிறார். குறிப்பாக தேவா காணாமல் போனது குறித்து போலீசார் அப்பகுதியைச் சேர்ந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி அதனை ஆய்வு செய்தனர். அதில், தேவா வீடு அருகே ஆம்புலன்ஸ் வந்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஆம்புலன்ஸ் கரூர் பகுதியைச் சேர்ந்தது என்றும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. போலீசார் அந்த மர்ம ஆம்புலன்ஸ் குறித்து விசாரணை மேற்கொண்ட போது உடனே கணவர் தேவாவை தான்தான் கொலை செய்ததாக கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் மனைவி இந்திராணி சரணடைந்தார்.
இந்திராணி போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், இந்திராணிக்கும், 41 வயதான வினோத்குமார் என்பவருக்கும் இடையே திருமணத்தை தாண்டிய தகாத உறவு இருந்து வந்ததாகவும், இதுகுறித்து அறிந்த தேவா இந்திராணியிடம் தகராறு ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார். வினோத்குமார் சித்தியின் கணவர் ஆவார், அதாவது இந்திராணிக்கு சித்தப்பா முறை வருகிறது என கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்திராணி - வினோத்குமார் உறவுக்கு தேவா இடையூறாக இருந்ததால் அவரை கொலை செய்ய தீர்மானித்து , சம்பவ தினத்தன்று இரவு தனது வீட்டிற்கு சித்தப்பா வினோத்குமார் மற்றும் கரூரில் இருந்து வந்த சில நபர்கள் தேவாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து தேவாவை கொலை செய்ததாகவும் இந்திராணி வாக்குமூலத்தில் தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட தேவாவின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றிச்சென்று 150 கிலோமீட்டருக்கு அப்பால், கரூரில் உள்ள ஒரு ரயில்வே தண்டவாளத்தில் யார் கண்ணிலும் படாதவாறு தேவாவின் உடலை வீசி உள்ளனர். இந்திராணி இவை அனைத்தையும் செய்துவிட்டு எதுவும் தெரியாதது போல் தனது தாயார் வீட்டிற்கே சென்றுள்ளார். இந்திராணி அளித்த இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தேவா காணாமல் போன வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் இந்திராணியை கைது செய்தனர்.
கொலைச் சம்பவம் நடந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று அந்த சம்பவம் குறித்து,தடவியல் அதிகாரிகள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டனர். கரூர் அரசு மருத்துவமனையில் உள்ள தேவாவின் உடலை உடற்கூராய்வு செய்ய கிணத்துக்கடவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள இந்திராணியின் சித்தப்பா வினோத்குமார் உள்ளிட்ட சிலரையும் கிணத்துக்கடவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.





















