Crime: டிவி பார்த்து கொண்டிருந்த கஞ்சா வியாபாரி வெட்டிக் கொலை; 4 பேர் நீதிமன்றத்தில் சரண்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே பிரபல கஞ்சா வியாபாரி கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேர் திண்டிவனம் நீதிமன்றத்தில் சரண்
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அடுத்துள்ள, தைலாவரம் பகுதியை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் வைகோ என்கின்ற சந்துரு (வயது 28). இவர் வினிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் புறநகர் பகுதிகளில் கஞ்சா வியாபாரம் செய்து வருகிறார். இதுபோக கடந்த சில வருடங்களுக்கு முன்பு, இவர் கொலை மற்றும் கொள்ளை ஆகிய சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மறைமலைநகர் பகுதியில் சரித்திர குற்றவாளியாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இவர் மீது சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலைகளில் மூன்று கொலை வழக்குகள் , ஆறு கொலை முயற்சி வழக்குகள், உட்பட 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இது தவிர இவர் அதே பகுதியில், கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. பல கொலை வழக்குகள் மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய சந்துரு, தன்னை யாராவது கொலை செய்து விடுவார்களா என உயிர் பயத்தில் வாழ்ந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் கடந்த 26ம் தேதி வழக்கம் போல மறைமலைநகர் அடுத்துள்ள தைலாபுரம் பகுதியில், தனது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டே மனைவியுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல், திடீரென அவரின் வீட்டிற்குள் புகுந்துள்ளது. டிவி பார்த்துக் கொண்டிருந்த சந்துருவை தலை ,கை, முகம் ஆகிய இடங்களில் வெட்டிவிட்டு தப்பி ஓடி உள்ளது. தனது கணவரை வெட்ட வந்த நபர்களை, தனது உயிரை பனையம் வைத்து சந்துருவின் மனைவி வினிதா காப்பாற்ற முயன்று உள்ளார். அப்பொழுது , அந்த கொடூர கும்பல் வினிதா வையும் வலது கையில் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளது. உடனடியாக இதுகுறித்து கூடுவாஞ்சேரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் இடத்திற்கு விரைந்த கூடுவாஞ்சேரி காவல்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சென்னை ஏரிவாக்கம் பகுதியை சேர்ந்த சுகுமார் மகன் ரத்னசபாபதி (வயது 28), சாமுவேல் மகன் விஷ்ணு (21), காவனூர் மருதமலை மகன் சக்திகுமார் (24), தைலாவரம் கிருஷ்ணன் மகன் கோபாலகண்ணன் (23) ஆகிய 4 பேரும் திண்டிவனம் 1-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இவர்களை ஒருநாள் திண்டிவனம் நீதிமன்ற காவலில் வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என மாஜிஸ்திரேட்டு கமலா உத்தரவிட்டார். இதையடுத்து ரத்னசபாபதி உள்பட 4 பேரும் விழுப்புரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
“பொறுப்பு; ஆட்சி; பென்ஷன் பணம் - பறிபோனால் நாங்கள் பொறுப்பல்ல” - வெளிப்படையாக மிரட்டும் அண்ணாமலை
பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயதும் இனி 60.. அமலுக்கு கொண்டுவந்த தமிழ்நாடு அரசு..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்