Crime: சிறையில் இருந்தபடியே வாட்ஸ் அப் கால்; வழக்கை வாபஸ் செய்ய மிரட்டல் - சீசிங் ராஜாவின் அடுத்த சேட்டை
பிரபல ரவுடி சீசிங் ராஜா சிறையில் இருந்து கொண்டே தொழிலதிபருக்கு வாட்ஸாப் கால் மூலம் வழக்கை வாபஸ் பெற சொல்லி கொலை மிரட்டல் விடுத்தாக வழக்குப்பதிவு.
சென்னை புறநகர் பகுதிகளில் தாம்பரம், குன்றத்தூர், படப்பை, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் உள்ளிட்ட தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகள், தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம் அவ்வப்போது தலை தூக்குவதுண்டு. அதுபோல, பெரிய ரவுடிகளை காவல்துறையினரும் கைது செய்து சிறையில் அடைத்து அவர்கள் கொட்டத்தை அடக்கி வருகின்றனர். இந்த நிலையில் பலமுறை கைது செய்யப்பட்டுள்ள ரவுடி சீசிங் ராஜா சிறையில் இருந்தபடியே வாட்ஸ் அப் காலில், வழக்கை வாபஸ் வாங்க கூறி கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீசிங் ராஜா
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு தாம்பரம் ராதாகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா (எ) சீசிங் ராஜா. வழிப்பறி குற்றவாளியாக சிறு குற்றங்களில் துவங்கிய ராஜா, படிப்படியாக வளர்ந்து ஏ (A+) ப்ளஸ் குற்றவாளியாக வளர்ந்தார். ராஜா சென்னை புறநகர் பகுதிகளில் தொழிலதிபர்களை மிரட்டுவது, ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். அதேபோல தொழிலதிபர்களை மிரட்டும் கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
33 வழக்குகள்
சீசிங் ராஜா மீது தாம்பரம், சிட்லபாக்கம், கூடுவாஞ்சேரி, சேலையூர், செங்கல்பட்டு, புளியந்தோப்பு, ராஜமங்கலம், அதேபோல தென் சென்னை பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள், தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள காவல் நிலையங்களில் 5 கொலை வழக்குகளும், 5 கொலை முயற்சி வழக்குகளும், ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 33 வழக்குகள், ராஜா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது. ராஜா மீது இதுவரை 7 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
வழக்கை வாபஸ் செய்
இந்தநிலையில், சென்னை சிட்லபாக்கத்தை சேர்ந்தவர் சரவணன்(45), இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தொழிலதிபர். இவரை, சீசிங் ராஜா சில ஆண்டுகளுக்கு முன்பு வீடு புகுந்து கடத்தி பணம் பறித்துள்ளார். இது தொடர்பாக புகாரளித்து கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். பின்னர் வேளச்சேரியில் ஒருவரை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு 05-11-2022 முதல் பூந்தமல்லி கிளை சிறைச்சாலையில் இருந்து வருகிறார்.
வழக்கு பதிவு செய்த போலீஸ்
சிறையில் இருந்து கொண்டே "வாட்ஸ் அப் கால்" மூலம் 2020ல் போடப்பட்ட வழக்கை வாபஸ் வாங்க சொல்லி ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக சரவணன் கொடுத்த புகாரின் பேரில் சிட்லப்பாக்கம் போலீசார் 294(b), 506(1), ஆகிய இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சரவணன் கடந்த மாதம் 12ஆம் தேதி, இது தொடர்பாக பள்ளிகரணை துணை ஆணையர் ஜோஸ் தங்கையாவிடம் புகார் கொடுத்துள்ளார்.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அந்த புகார் சிட்லபாக்கம் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரிக்கு அனுப்பப்பட்டு, வழக்குபதிவு செய்யாமல் அலை கழித்ததாகவும், அதனால் சரவணன் தாம்பரம் மாநகர காவல் ஆணையரை சந்தித்து புகார் தெரிவித்தார். அதன் பிறகு இன்று வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. சிறைச்சாலையில், செல்போன் பயன்படுத்தத் தடை இருக்கும்போது கைதி ஒருவர் வாட்ஸ்அப் கால் மூலம் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.