Crime: ஆண்களுக்கான சட்டம் எங்கே? ”பாடாய் படுத்திய மனைவி” கணவன் தற்கொலை - என்னென்ன டார்ச்சர்?
Crime: மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து கொடுமைப்படுத்துவதாக கூறி, 33 வயதான பொறியாளர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: ஆண்களுக்கான சட்டம் இருந்திருந்தால் தான் தற்கொலை செய்திருக்கமாட்டேன் என, தனது கடைசி வீடியோவில் அந்த நபர் குமுறியுள்ளார்.
மனைவி தொல்லையால் தற்கொலை:
உத்தரபிரதேச மாநிலம் எட்டாவாவைச் சேர்ந்த 33 வயது பொறியாளர் ஒருவர் தனது மனைவி மற்றும் மாமியார் கொடுமையை தாங்கமுடியவில்லை என குறிப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோஹித் யாதவ் எனும் அந்த நபர் தற்கொலைக்கு முன்பாக பதிவு செய்த வீடியோவில், “மிரட்டல் விடுத்ததோடு, தன் மீது பொய் வழக்குகள் பதிவு செய்ததாகவும்” தனது மாமியார் மீது குற்றம்சாட்டியுள்ளார். மேலும், "என் மரணத்திற்குப் பிறகும் எனக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், என் அஸ்தியை சாக்கடையில் வீசுங்கள்" என்று தனது பெற்றோருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சடலம் மீட்பு
கடந்த வியாழனறு எட்டாவா ரயில் நிலையத்திற்கு வெளியே உள்ள ஜாலி ஹோட்டலில் மோஹித் தங்கியிருந்தார். மறுநாள் காலையில் அவர் தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அறைக்கான மற்றொரு சாவியை கொண்டு உள்ளே சென்று பார்த்தப்போது, மோஹித்தை தூக்கில் தொங்கிய நிலையில் ஹோட்டல் ஊழியர்கள் கண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவுரையா மாவட்டத்தைச் சேர்ந்த மோஹித், ஒரு சிமென்ட் நிறுவனத்தில் ஃபீல்ட் இன்ஜினியராக பணிபுரிந்தார். முன்னதாக பிரியா என்பவரை 7 வருடங்களாக காதலித்து கடந்த 2023ம் ஆண்டு அவர் திருமணம் செய்துகொண்டார்.
மாமியார் கொடுத்த பொய் வழக்கு
மரணத்திற்கு முன்பாக மோஹித் பதிவு செய்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ”இரண்டு மாதங்களுக்கு முன்பு பீகாரில் தனியார் ஆசிரியர் வேலை கிடைத்தபோது பிரியா கர்ப்பமாக இருந்தார். ஆனால் அவரது தாயார் அவரை கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தினார். எனது மனைவியின் அனைத்து நகைகளையும் மாமியார் தன்னிடம் வைத்துள்ளார். திருமணம் செய்து கொண்டபோது நான் வரதட்சணையே கேட்கவில்லை. ஆனால் எனது மனைவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், எனது குடும்பத்தினர் அனைவருக்கும் எதிராக பொய் வழக்குகளை பதிவு செய்து மிரட்டுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார்.
”வீட்டை கேட்டு மிரட்டல்”
மேலும்,"என் வீட்டையும் சொத்தையும் அவள் பெயரில் பதிவு செய்யாவிட்டால், என் குடும்பத்தை வரதட்சணை வழக்கில் சிக்க வைப்பேன் என்று எனது மனைவி மிரட்டுகிறாள். அவளுடைய தந்தை மனோஜ் குமார் பொய் புகார் அளித்தார், அவளுடைய சகோதரர் என்னைக் கொலை செய்வதாக மிரட்டினார். அப்போதிருந்து, எனது மனைவி ஒவ்வொரு நாளும் என்னுடன் சண்டையிடத் தொடங்கினாள். அவளுடைய குடும்பத்தினர் அவளுக்கு ஆதரவாகவே செயல்பட்டனர்” என குற்றம்சாட்டினார்.
சட்டம் எங்கே? - பெற்றோருக்கு கோரிக்கை
வீடியோவின் முடிவில் தனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்ட மோஹித், ”இறந்த பிறகும் தனக்கு நீதி கிடைக்காவிட்டால், தனது அஸ்தியை சாக்கடையில் வீசுங்கள். இந்த வீடியோவை நீங்கள் பெறுவதற்குள், நான் இந்த உலகத்தை விட்டுப் போய்விடுவேன். ஆண்களுக்கு என ஒரு சட்டம் இருந்திருந்தால் நான் தற்கொலை முடிவை எடுத்திருக்க மாட்டேன். என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரின் துன்புறுத்தலை என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என தனது வீடியோவில் பேசியுள்ளார். வெள்ளிக்கிழமை காலை அவரது வீடியோ தொலைபேசிகளில் வந்தபோது அதனை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பிரியா யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினரிடமிருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளியாகவில்லை.
வலுக்கும் கோரிக்கை
பெண்களின் பொய்யான குற்றச்சாட்டுகளிலிருந்து ஆண்களைப் பாதுகாக்கும் சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த ஆண்டு தனது மனைவி தன் பொய்யான வழக்குகளைப் பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டி பெங்களூருவில் தொழில்நுட்ப வல்லுநரான அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டதிலிருந்து இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது ஆண்கள் உரிமை ஆர்வலர்களிடையே ஒரு எச்சரிக்கையை எழுப்பியுள்ளது.





















