திண்டுக்கல்: காந்தி காய்கறி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 4 பேருக்கு அரிவாள் வெட்டு
காந்தி காய்கறி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு. நான்கு மணி நேரம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணத்தினால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி காய்கறி மார்க்கெடடில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. நான்கு மணி நேரம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணத்தினால் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட காந்தி மார்க்கெட்டில் தினந்தோறும் 20 முதல் 25 டன் வரை திண்டுக்கல் மாவட்டம் சுத்தி உள்ள பகுதியில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வர்த்தகம் நடைபெறும். நேற்று நள்ளிரவு மார்க்கெட்டில் கடை நடத்தி வரும் அபிபுல்லா, தனது கடைக்கு சுமையை இறக்குவதற்காக சுமை தூக்கும் தொழிலாளர்களை அழைத்துள்ளார். இதில் அபிபுல்லாவிற்கும், சுமை இருக்கும் தொழிலாளர்களுக்கும் வாய் தகராறு முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனை மார்க்கெட்டில் உள்ள சங்கத்தினர் சமாதானப்படுத்தி அனுப்பியுள்ளனர். ஆனால் அபிபுல்லா, ரவுடி கும்பலை வரவழைத்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் நான்கு பேரையும் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் நான்கு பேரும் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து மார்க்கெட்டில் பணிபுரியும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மற்றும் திண்டுக்கல் நகரில் உள்ள அனைத்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், அதிகாலை இறக்க வேண்டிய காய்கறி மூட்டைகளை இறக்காமல் போராட்டம் நடத்தி உள்ளனர். இதனால் காந்தி மார்க்கெட்டில் 4 மணி நேரம் காய்கறிகள் விற்கப்படாமல் வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. இப்பிரச்னைக்கு சமூகத் தீர்வு காண்பதற்காக நாளை ஒருநாள் விடுமுறை விட்டு பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்தனர்.
பழனி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளில் 900 அரிசி மூட்டைகள் மாயமானதால் 5 பேர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான கிடங்கு உள்ளது. உரம், அரிசி, சிமெண்ட் உள்ளிட்ட பொருட்கள் இங்கு இருப்பு வைக்கப்படுகின்றன. இந்நிலையில் கடந்த வாரம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் மதுரை மண்டல அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது இங்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகளில் சுமார் 900 அரிசி மூட்டைகள் குறைவாக இருப்பது தெரியவந்தது.
தொடர்ந்து அரிசி மூட்டை மாயமானது குறித்து மண்டல உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கபட்டது. இதை அடுத்து நுகர் பொருள் வாணிபக் கிடங்கு அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக நுகர் பொருள் வாணிபக் கிடங்கு பொறுப்பாளர் தர்மராஜ், உதவிப் பொறுப்பாளர் ஜெயசங்கர், இளநிலை உதவியாளர் ரங்கசாமி, பட்டியல் எழுத்தர் ஆறுமுகம், உலகநாதன் ஆகிய 5ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் 900 மூட்டைகள் அரிசி மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்