(Source: ECI/ABP News/ABP Majha)
கிரெடிட் கார்டில் இருந்து அமெரிக்க டாலராக ரூ.2 லட்சம் மோசடி - பணப்பரிவர்த்தனையில் கவனம் மக்களே
சர்வதேச பண பரிவர்த்தனையை தேவையில்லாமல் பொதுமக்கள் ஆக்டிவ் செய்து வைத்திருக்க கூடாது.
தூத்துக்குடியில் சர்வதேச பண பரிவர்த்தனை ஆக்டிவ் செய்யப்பட்ட கிரெடிட் கார்டில் இருந்து அமெரிக்க டாலராக மோசடி செய்யப்பட்ட ரூ.2 லட்சம் பணத்தை தூத்துக்குடி மாவட்ட சைபர் குற்ற பிரிவு போலீசார் துரித நடவடிக்கை எடுத்து மீட்டுக் கொடுத்தனர்.
தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியை சேர்ந்த ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் என்பவர் துபாய் செல்வதற்காக அவருடைய கிரெடிட் கார்டில் சர்வதேச பண பரிவர்த்தனையை ஆக்டிவ் செய்து வைத்துள்ளார். அதன் பின்பு கடந்த 24.06.2022 அன்று அவரது செல்போன் எண்ணுக்கு 2572 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,09,972) பணம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு குறுஞ்செய்தி வந்துள்ளது.
இதையடுத்து ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் அவரது கிரெடிட் கார்டை பிளாக் செய்து, இந்திய அரசின் cybercrime.gov.in என்ற சைபர் கிரைம் இணைய தள முகவரியில் புகார் பதிவு செய்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ், சிவசங்கரன் ஆகியோருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு இழந்த பணத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். விசாரணையில் ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் ஓடிபி எதுவும் கொடுக்கவில்லை என்பது தெரியவந்தது. இதனால் சம்மந்தப்பட்ட வங்கி 2572 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூபாய் 2,09,972) தொடர்புடைய பண பரிவர்த்தனையை உடனடியாக நிறுத்தம் செய்து ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் இழந்த பணத்தை திருப்பி அவருடைய கிரெடிட் கார்டில் வரவு வைக்க நடவடிக்கை எடுத்தது.
இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், பாதிக்கப்பட்ட ராமசாமி வெங்கட சுப்பிரமணியனை மாவட்ட காவல்துறை அலுவலகத்துக்கு வரவழைத்து, அவரது கிரெடிட் கார்டில் பணம் வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணங்களை வழங்கினார். பணத்தை விரைவாக மீட்ட சைபர் குற்றப்பிரிவு போலீஸாரை எஸ்பி பாராட்டினார்,
மேலும் இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கூறும்போது, சர்வதேச பண பரிவர்த்தனையை தேவையில்லாமல் பொதுமக்கள் ஆக்டிவ் செய்து வைத்திருக்க கூடாது. ஏடிஎம், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், இ-காமர்ஸ் போன்ற சேவைகளை அதன் பண பரிவர்த்தனைகளின் உச்சவரம்பை தங்களுக்கு தேவையான தொகையை சம்மந்தப்பட்ட வங்கி மூலமாக நிர்ணயித்து பாதுகாப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.