Crime: முள்ளங்கி சாம்பாரில் எலி பேஸ்ட்.. மாமனார், மாமியாரை கொலை செய்த மருமகள்..!
விருத்தாசலத்தில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபருடன் சேர்ந்து மாமனார், மாமியார், பக்கத்து வீட்டு சிறுவனை விஷம் கலந்து கொன்ற வழக்கில் ஓராண்டுக்கு பின் மருமகளும் ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த நபருடன் சேர்ந்து மாமனார், மாமியார், பக்கத்து வீட்டு சிறுவனை சாம்பாரில் விஷம் கலந்து கொன்ற வழக்கில் ஓராண்டுக்கு பின்னர் மருமகளும் அவருடைய ஆண் நண்பரும் கைது செய்யப்பட்டனர்.
திருமணத்தை மீறிய உறவு:
இலங்கியனூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் வேல்முருகன். இவருக்கு 39 வயதாகிறது. இவருக்கும் விருத்தாசலம் தங்கமணி கார்டனைச் சேர்ந்த ஓய்வுபெற்ற உதவி காவல்ஆய்வாளர் பூமாலையின் மகள் கீதா (33) விற்கும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கீதாவிற்கு, விருத்தாசலம் புதுக்குப்பம் டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியின் பின்புறம் வசித்து வரும் ஹரிஹரன் (44) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவ்வப்போது வெளியே சென்று வருவதாக கூறி சென்று, கீதா, ஹரிஹரனை சந்தித்து வந்தததாகவும் கூறப்படுகிறது.
முள்ளங்கி சாம்பாரில் விஷம்:
இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்வதை ஊர்க்காரர்கள் சிலர் பார்த்துவிட்டு சுப்பிரமணியத்திடம் கூறியுள்ளனர். அதுமட்டும் அல்லாமல் மாமனார் சுப்பிரமணியன் தனது மனைவி ஜெயந்தியிடம் விஷயத்தை கூறியுள்ளார். இருவரும் சேர்ந்து மருமகளுக்கு அறிவுரை வழங்கியதாக தெரிகிறது. ஆனால் கீதாவோ, மாமனார், மாமியாரின் பேச்சை கேட்காமல், தொடர்ந்து தனது ஆண் நண்பரை சந்தித்து வந்துள்ளார். இந்த நிலையில் இந்த விஷயத்தை சுப்பிரமணியனும் ஜெயந்தியும், வேல்முருகனுக்கு தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த கீதா, கடந்த 2021 -ஆம் ஆண்டு டிசம்பர் 29- ஆம் தேதி இலங்கியனூரில் உள்ள தனது மகன்கள், மாமனார்-மாமியார், கணவர் உள்ளிட்டோருக்கு முள்ளங்கி சாம்பார் வைத்திருந்தார்.
ஓராண்டுக்கு பிறகு கைது:
அதில் கீதா எலி பேஸ்ட்டை கலந்து மாமனார், மாமியாருக்கு கொடுத்துள்ளார். இது தெரியாமல் அந்த வீட்டுக்கு வந்த பக்கத்து வீட்டை சேர்ந்த பிரபுவின் 10 வயது மகன் நித்தீஸ்வரரும் அதை சாப்பிட்டுள்ளார். இதனால் மூவரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மூவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டனர். இது தொடர்பாக சந்தேகமடைந்த வேல்முருகன் போலீஸில் புகார் அளித்தார். இது குறித்து 2022 ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி மங்கலம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக துப்பு துலக்கிய போலீசார், இது தொடர்பாக கீதாவையும் அவரது ஆண் நண்பர் ஹரிஹரனையும் கைது செய்தனர்.