Crime: காரின் கண்ணாடியை உடைத்து 8 பவுன் நகை கொள்ளை; சிசிடிவியில் சிக்கிய திருடர்கள்
கரூரில் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கார் கண்ணாடியை உடைத்து ட்ராவல் பேக்கில் இருந்த 8 பவுன் நகை, லேப்டாப்பை திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியீடு - போலீசார் விசாரணை.
கரூரில் முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து கார் கண்ணாடியை உடைத்து ட்ராவல் பேக்கில் இருந்த 8 பவுன் நகை, லேப்டாப்பை திருடி சென்ற சிசிடிவி காட்சி வெளியானது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம், ஆதனூர் ஊராட்சி பால்மடைபட்டியை சார்ந்த பாலமுருகன் - சரண்யா தம்பதியினர் கரூர் மாரியம்மன் கோயில் அருகே உள்ள தனியார் உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வரும் பொழுது நிறுத்தி வைத்திருந்த அவர்களுக்கு சொந்தமான காரில் ஏறும்பொழுது கண்ணாடி உடைந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்
காரில் இருந்த டிராவல் பேக்கில் இருந்த 8 பவுன் நகை மற்றும் லேப்டாப் திருடப்பட்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தவர்கள் போலீசாருக்கு புகார் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை சோதனை செய்து பார்த்துள்ளனர்.
அதில் முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து கார் கண்ணாடியை உடைத்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் பள்ளி மாணவன் உயிரிழப்பு
கரூர் அடுத்த காக்காவடி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் சந்தோஷ் (16). இவர், பள்ளி வளாகத்தில் செயல்படும் உணவகத்தில் இரவு உணவு சாப்பிட செல்லும்போது, மயங்கி விழுந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மாணவனின் உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அரவக்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் சிக்கிய பெண் மீது லாரி ஏறியதால் உடல் நசுங்கிப் பலி
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அருகே உள்ள லிங்கத்தூர் சரளப்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி சம்பூர்ணம் வயது 40. இவர் கரூரில் உள்ள தனியார் ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இரவு பணியை முடித்துவிட்டு கரூரில் இருந்து சரளப்பட்டிக்கு உப்பிடமங்கலம் சாலையில் தனது ஸ்கூட்டரில் சம்பூர்ணம் சென்று கொண்டிருந்தார்.
அப்போது உப்பிடமங்கலம் லிங்கத்தூர் நால்ரோடு பகுதியில் எதிர் திசையில் ஜோதிவடத்தை சேர்ந்த ஆனந்த் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் சம்பூர்ணம் ஓடி வந்த ஸ்கூட்டர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட கீழே விழுந்த சம்பூரணத்தின் மீது அந்த வழியாக ஜல்லிக்கட்டு சென்ற டிப்பர் லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் தலை நசுங்கிய சம்பூர்ணம் சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார் சைக்கிளிலிருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வெள்ளியணை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். பின்னர் படுகாயம் அடைந்த ஆனந்தை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பூர்ணத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.