Crime: பெண்ணை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பிய நபர் அதிரடி கைது
சமூக வலைதளத்தில் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - காவல்துறை
நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படத்தை தவறாக சமூக வலைதளங்களில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பரப்பியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தனது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் அடையாளம் தெரியாத நபர் தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியதாக புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் சைபர் கிரைம் காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜு மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் ராஜ் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது திருப்பூர் மாவட்டம் மேட்டுப்பாளையம், S.V காலனி பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ்(25), என்பதும் இவர் சமூக வலைதளங்களில் போலி ID தயார் செய்து பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பியதும் தெரியவந்தது. அதன் பின்னர் சுபாஷ் சந்திரபோஸ்யை 05.07.2022 அன்று சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர்.. இதில் வேறு ஒரு நபருக்கும் தொடர்பு இருப்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் அந்த நபர் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அத்தகவலின் பேரில், சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் ராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் ராஜரத்தினம் தலைமையிலான போலீசார் ராமநாதபுரம் மாவட்டம், பாரதியார் நகர், கம்பர் தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (35) என்பவரை ராமநாதபுரம் மாவட்டம், கேணிக்கரை பகுதியில் வைத்து 22.02.2023 இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காவல்துறையினர், சமூக வலைதளத்தில் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இணையவழி குற்றம் செய்பவர்கள் அதிகரித்து வருவதால் இணையதளத்தை கவனமுடன் கையாள வேண்டும் என்றும், நிதி நிறுவனங்களின் பெயரில் ஏமாற்றும் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் இணையதளங்களில் தேவையில்லாத விளம்பரங்களை நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என்றும், சைபர் கிரைம் புகார்களுக்கு https://cybercrime.gov.in/ என்ற இணையதளத்திலோ அல்லது 1930 என்ற சைபர் கிரைம் தொலைபேசி எண்ணிலோ புகார் அளிக்கவும் என்று திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்