Crime: அண்ணாமலையார் கோவிலில் கத்தியுடன் புகுந்த வாலிபர் - காரணம் என்ன..?
அவருடைய காதலியிடம் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு விஸ்ரோடு பகுதியை சேர்ந்த பிரத்தம், ஜெனிபர் ஆகிய இருவரும் காதலர்கள். இவர்கள் இரண்டு பேரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இதில் பிரத்தம் அவருடைய காதலியை அழைத்துக்கொண்டு இரண்டு சக்கர வாகனம் மூலம் நேற்று காலையில் திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். அப்போது மணலூர்பேட்டை சாலையில் உள்ள கண்ணமடை காட்டுப்பகுதிக்கு காதல் ஜோடி சென்றுள்ளனர். அவர்களை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் காதலர்கள் இருவர்கள் மீதும் ஸ்பிரே அடித்ததாக கூறப்படுகிறது. ஸ்பிரே அடித்து அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கண்ணமடை காட்டுப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர், திடீரென பெண் அலறல் சத்தம் கேட்டு உடனடியாக காட்டுப் பகுதிக்குள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது காதலன் காதலியுடன் ஒரு சிலர் மர்ம நபர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
வனத்துறையினர் கண்டவுடன் அங்கிருந்த மர்ம நபர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். ஏற்கனவே போதையில் பிரத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. பிரத்தம் அருகிலிருந்த கொடுவாளை திடீரென எடுத்து அங்கிருந்து வனத்துறையினரை உள்ளிட்டவர்களை மிரட்டி உள்ளார். பின்னர் நெடுஞ்சாலைக்கு வந்த பிரத்தம் சாலையில் சென்ற வாகன ஓட்டிகளிடம் கொடுவாளை காட்டி மிரட்டி இருசக்கர வாகனத்தை பறித்துக் கொண்டு திருவண்ணாமலை நகர் பகுதிக்கு வந்துள்ளார். மேலும் அண்ணாமலையார் கோவிலுக்குள் கொடுவாகத்தியுடன் புகுந்த பிரத்தம் ஆணையர் அலுவலகத்தில் புகுந்து அதிகாரியின் இருக்கையில் அமர்ந்து உள்ளார். அதன் பிறகு அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் கோவிலில் பணிபுரியும் வேலை ஆட்கள் அனைவரும் பிரத்தமை யார் என்று கேட்டுள்ளனர். உடனடியாக அங்கிருந்த பிரத்தம் கொடுவாளுடன் அவர்களை மிரட்டி அங்கு இருந்த கண்ணாடிகளை உடைத்ததுடன் பொதுமக்களை அச்சிறுத்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து ஓடிய பிரத்தமை பிடிக்க முயற்சி செய்தனர். அவர் கோவிலின் மீது ஏறியுள்ளார். அவர் மேலிருந்து கீழே குதித்த போது அவருடைய கால் முறிந்தது. பிறகு அவரை பிடித்த காவல்துறையினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவருடைய காதலியிடம் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வாலிபர் மது போதையில் இருந்தாரா? பெங்களூரில் இருந்து இவர்கள் எதற்கு திருவண்ணாமலைக்கு வந்தார்கள். இவர்களை விரட்டி வந்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலை கண்ணமடை காட்டு பகுதியில் அடிக்கடி வழிபறி மற்றும் பெண்கடத்தலில் மர்மநபர்கள் இடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.