Crime: திண்டுக்கல் அருகே பழைய இரும்பு வியாபாரி வெட்டி படுகொலை
திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட வீரக்கல் அருகே பழைய இரும்பு வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வீரக்கல் அருகே தெற்கு மேட்டுப்பட்டி சேர்ந்தவர் சின்னத்துரை (60) இவருக்கு கலையரசி (56) என்ற மனைவியும், கனகராஜ் என்ற மகனும், நாகஜோதி என்ற மகளும் உள்ளனர். கனகராஜ் திருப்பூரில் உள்ளார்.
நாகஜோதி திண்டுக்கல்லில் குடியிருந்து வருகிறார். பழைய இரும்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை கிராமம் கிராமமாக சென்று வியாபாரம் செய்து வரும், சின்னத்துரை தெற்கு மேட்டுப்பட்டியில் தனது மனைவி கலையரசியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், தெற்கு மேட்டுப்பட்டியில் இரண்டு பேர் சின்னத்துரையிடம் தகராறில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் சின்னத்துரை வீட்டிற்கு சென்றபோது அவரைப் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சின்னத்துரை வீட்டு அருகே அவரை சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் கழுத்து தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டு சின்னத்துரை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த செம்பட்டி போலீசார் சின்னத்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சம்பவ இடத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு, அது சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றது.
கொலையாளிகளை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பேரில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மேலும் தெற்கு மேட்டுப்பட்டியில் உள்ள சிசிடி கேமராவை வைத்து கொலையாளிகள் யார் என அடையாளம் காண போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.