Online Game Addiction | பெரும் பரபரப்பு.. வீட்டில் இருந்து 33 லட்சம், 213 சவரன் நகைகளுடன் தப்ப முயன்ற மாணவன்.. என்ன நடந்தது?
வீடியோ கேம் விளையாடுவதற்காக 213 பவுன் நகைகள் மற்றும் ரூபாய் 33 லட்சம் ரொக்கத்துடன் நேபாளம் தப்பிச்செல்ல முயன்ற மாணவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர்.
சென்னை, வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த குடிநீர் ஒப்பந்ததாரர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், தான் சென்னை குடிநீர் வாரியத்தில் ஒப்பந்ததாரராகவும், தனது மனைவி கல்லூரி பேராசிரியையாகவும் பணியாற்றி வருவதாகவும், தங்களுக்கு ஒரு மகன் இருப்பதாகவும் கூறிய அவர், தனது மகனை காணவில்லை என்று புகார் தெரிவித்திருந்தார். மேலும், தனது மகன் மாயமானதுடன் வீட்டில் இருந்த 213 பவுன் நகை, ரூபாய் 33 லட்சம் பணமும் மாயமாகி இருப்பதாகவும் புகார் அளித்திருந்தார். மகனையும், பணம் மற்றும் நகைகளையும் மீட்டுத்தர வேண்டும் என்று அவர் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, துணை ஆணையர் சிவபிரசாத் உத்தரவின்பேரில் உதவி ஆணையர் இருதயராஜ் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் டேனி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாணவரை தீவிரமாக தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. மாணவரின் செல்போன் எண்ணை வைத்து அவரை தேடியதில் மாணவர் தாம்பரத்தில் இருப்பது தெரியவந்தது. பின்னர், போலீசார் மாணவரை தாம்பரத்தில் மடக்கிப்பிடித்தனர். மேலும், அவரிடம் இருந்த பணமும், நகையையும் மீட்டதுடன் மாணவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
மாணவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் போலீசாரையே மாணவர் அதிர்ச்சியடைய வைத்தார். மாணவரிடம் இதுதொடர்பாக கேட்டபோது, நான் இணையதளங்களில் வீடியோ கேம் அடிக்கடி விளையாடுவேன். எனது பெற்றோர்கள் வீடியோ கேம் விளையாடும்போது எல்லாம் என்னைத் திட்டிக்கொண்டே இருப்பார்கள். மேலும், என்னை விளையாடக்கூடாது என்று தடுத்தனர். இதனால், வெளிநாடு சென்றுவிட்டால் எனது விருப்பப்படி வீடியோ கேம் விளையாடலாம் என்று கருதினேன்.
இதற்காக வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்துடன் வீட்டைவிட்டு வெளியேறினேன். நேபாளம் செல்வதற்காக விமானத்தில் டிக்கெட் முன்பதிவும் செய்துவிட்டேன். இதற்காக, கொரோனா பரிசோதனை செய்துவிட்டு அதன் முடிவுக்காக காத்திருந்தேன். விமானத்தில் அதிக நகைகளை கொண்டு சென்றால் மாட்டிக்கொள்வோம் என்பதால், அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் நகைகளை ரூபாய் 70 லட்சத்துக்கு அடகு வைக்க முயற்சித்தேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
அவரது வாக்குமூலத்தை கேட்டு போலீசாரே அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும். நண்பர்களுடன் வீடியோகேம் விளையாடுவதற்காக புதிய செல்போன் ஒன்றையும் வாங்கி, அதில் விளையாடியும் வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. காவல்துறையினர் சரியான நேரத்தில் மாணவரை மடக்கிப்பிடித்ததால் அவர் நேபாளம் செல்வது தடுக்கப்பட்டதுடன் பணமும், நகையும் பாதுகாப்பாக மீட்கப்பட்டது. பின்னர், மாணவருக்கு போலீசார் அறிவுரை வழங்கி கண்டித்ததுடன், பணம் மற்றும் நகைகளுடன் மாணவரையும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்