பொத்தேரியில் 1000 போலீசார் கஞ்சா வேட்டை... சிக்கிய பிரபல ரவுடி.. கிலோ கணக்கில் போதைப்பொருள் பறிமுதல்
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியில் நடைபெற்ற போலீசாரின் கஞ்சா வேட்டையில், ஏராளமான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் கஞ்சா, பாங்கு, போதை சாக்லேட்டுகள், போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிக்கும் கல்லூரி மாணவர்கள், ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள், இளைஞர்கள் ஆகியோர்களை குறி வைத்து போதை பொருட்களை விற்கும் கும்பல் செயல்பட்டு வருகிறது.
தப்பித்து செல்லும் முக்கிய ரவுடிகள்..
தொடர்ந்து போதைப்பொருள் விற்கும் கும்பல்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து வந்தாலும், போதைப் பொருள் விற்பனையை மேற்கொள்ளும் முக்கிய ரவுடிகள் சிக்காமல் இருந்து வருகின்றனர். இதனால் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சிறுவயதிலேயே போதைக்கு அடிமையாகும் சூழல் ஏற்பட்டு விடுகிறது.
சென்னை பொத்தேரி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் விடுதிகள் மற்றும் தனியாக வீடு எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இவ்வாறு தனிமையில் இருக்கும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன.
திடீர் சோதனையில் ஈடுபட்ட போலீஸ்
இன்று காலை தாம்பரம் கமிஷனர் உத்தரவின் பெயரில், தாம்பரம் கூடுதல் ஆணையர் மகேஸ்வரி தலைமையில் 25க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் திடீரென பொத்தேரி பகுதியில் மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர்.
காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் பல்வேறு வகையான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அரை கிலோ கஞ்சா, 6 கஞ்சா சாக்லேட்டுகள், கஞ்சா ஆயில், பாங்கு, ஹுக்கா இந்திரம், 6 கிலோ ஹுக்கா பவுடர்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ஒரு மாணவி உட்பட 19 மாணவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
பல்வேறு கோணங்களில் விசாரணை
மாணவர்களுக்கு போதை பொருட்கள் எப்படி கிடைக்கிறது?. போதைப் பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் யார் யார் ?. போதைப்பொருட்கள் எந்த நேரத்தில் கைமாற்றப்படுகிறது என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
போதைப் பொருட்களை பயன்படுத்தும் நபர்கள் என்பதால் அவர்களுக்கு, கவுன்சிலிங் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்கள் நலன் கருதி அவர்கள் மீது, எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படாது என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிக்கிய பிரபல ரவுடி
மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நந்திவரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி செல்வமணி (29) மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, ஏ ப்ளஸ் ரவுடியாக வலம் வந்த செல்வமணியை கைது செய்த போலீசார். செல்வமணியிடம் இரண்டு கால் கிலோ கஞ்சா மற்றும் 5 கத்திகளை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து, நடைபெறும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.