சென்னை: வாடிக்கையாளர் திட்டியதால் பார்ட் டைம் டெலிவரி செய்து படித்துவந்த இளைஞர் தற்கொலை.! நடந்தது என்ன.?
Chennai Food delivery Boy Suicide: சென்னையில் படித்துக் கொண்டே பகுதி நேரமாக உணவு டெலிவரி வேலை செய்து வந்த இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Chennai Food delivery Boy Suicide: சென்னையில் வாடிக்கையாளர் திட்டியதால், 19 வயதான உணவு டெலிவரி வேலை பார்த்துவந்த பவித்ரன் எனும் இளைஞர், செப்டம்பர் 11 புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார். பி.காம் மாணவரான பவித்ரன், தனது படிப்பையும், டெலிவரி வேலையை பகுதி நேரமாகவும் சேர்த்து பார்த்துக் கொண்டிருந்தார். அவரது, இந்த சோக முடிவுக்கு வாடிக்கையாளரைக் குற்றம் சாட்டி தற்கொலைக் குறிப்பில் தெரிவித்துவிட்டு, அவரது இல்லத்தில் இறந்து கிடந்தார்.
டெலிவரிக்கு தாமதம்:
செப்டம்பர் 11ஆம் தேதி, சென்னை கொரட்டூரில் மளிகைப் பொருட்களை விநியோகம் செய்ய பவித்ரன் சென்றுள்ளார். அப்போது பொருட்கள் டெலிவரி செய்ய வேண்டிய வாடிக்கையாளரின் வீட்டைக் கண்டுபிடித்து செல்வதற்கு தாமாதமாகியிருக்கிறது. பொருட்கள் டெலிவரியாவதற்கு தாமதமானதால் விரக்தியடைந்த வாடிக்கையாளர், அவரை கடுமையாக திட்டியதாகவும், டெலிவரி சேவையில் புகாரை அளித்ததாகவும், மேலும் அவரை மீண்டும் அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
காவல்துறையில் புகார்
இந்த சம்பவம் நடைபெற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு, மன உளைச்சலுக்கு ஆளான பவித்ரன், டெலிவரி சர்வீஸ் மூலம் கண்டித்ததால் கோபத்தில் வாடிக்கையாளரின் வீட்டின் மீது கல்லை எறிந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தையடுத்து வாடிக்கையாளர் காவல்துறையில் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து பவித்திரனை அழைத்த காவல்துறையினர், அவரது பெற்றோர் முன்னிலையில் கண்டித்தும், எச்சரிக்கை விடுத்தும் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் ஐந்து நாட்களுக்குப் பிறகு, பவித்ரன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
அவரது இறப்பு குறிப்பில் “ என் மரணத்திற்கு காரணம் , என்னை மன உளைச்சளுக்கு ஆளாக்கி, டெலிவரி செய்ய சென்ற இடத்தில் , அவர்கள் என்னை கடுமையாக திட்டியதால் மட்டுமே. இதுபோன்று பெண்கள் உலகில் உள்ளவரை இன்னும் பல மரணங்கள் நிகழும் “ எழுதியிருக்கிறார்.
பகுதி நேரமாக வேலை பார்த்துக் கொண்டும் பட்டப்படிப்பு படித்துக்கொண்டும் இருந்த இளைஞரின், யாரும் எடுக்க கூடாத இந்த சோக முடிவானது , சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு:
யாரேனும் மனநலப் பிரச்னைகளை எதிர்கொள்வது அல்லது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் இருப்பது உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து அவர்களுக்கு அன்பான ஆறுதல்களை தெரிவித்து உதவி செய்யுங்கள்.
தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்கக்கூடிய தற்கொலை தடுப்பு அமைப்புகளின் சில ஹெல்ப்லைன் எண்கள் இங்கே உள்ளன. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் இருந்தால் , இந்த எண்களை தொடர்பு கொள்ளவும்.
மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை உதவி எண்: 104
சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044-24640050