சென்னை நகை கடையில் பரபரப்பு! மிளகாய் பொடி, கத்தி: திருட முயன்ற பெண் கைது
நகை வாங்குவது போல் நடித்து கடை உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டி மிளகாய் பொடி தூவி திருட முயன்றவரை கடை உரிமையாளர்கள் மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியாகியுள்ளது

மிளகாய் பொடி தூவி , நகையை திருட முயன்ற பெண்
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் தேவராஜ் என்பவர் மஞ்சு ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் கடந்த 40 ஆண்டு காலமாக நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அவரது கடைக்கு பர்தா அணிந்து வந்து நகை வாங்குவது போல வந்த பெண் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த மிளகாய் பொடியை தூவி சிறிய கத்தி ஒன்றை எடுத்து கடையின் உரிமையாளரான தேவராஜையும் தாக்க முற்பட்டுள்ளார்.
சுதாரித்துக் கொண்ட தேவராஜ் மற்றும் அவருடை மனைவி, மகன் ஆகிய மூன்று பேரும் அந்தப் பெண்ணை மடக்கி பிடித்த போது மிளகாய் பொடி தூவி தப்பி முயன்றுள்ளார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் மற்றும் சாலையோர வியாபாரிகள் ஓடி வந்து அந்த பெண்னை மடக்கி காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
திருவொற்றியூர் போலீசார் பெண்னை கைது செய்து விசாரணை செய்ததில் முதற் கட்டமாக அந்த பெண் பெயர் ஜெய சித்ரா என்பதும் காலடிப்பேட்டை மேற்கு மாட வீதி பகுதி சேர்ந்த இவர் கணவருக்கு தெரியாமல் கடன் வாங்கியதாகவும் அந்த கடன் பிரச்சனையிலிருந்து மீள்வதற்காக பர்தா அணிந்து வேடமிட்டு அந்த பெண் வந்திருப்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது. இந்த நிலையில் அந்த பெண் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
" டிசைன்கள் பிடிக்கவில்லை " 15 - க்கும் மேற்பட்ட நகை கடைகளில் , நகைகளை திருடிய நபர்கள்
சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலையில் மஹாவீர் ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடையை நடத்தி வருபவர் ரோகன் ( வயது 23 ) கடந்த 2 - ம் தேதி மதியம் இவரது கடைக்கு வந்த இருவர் , மோதிரம் வாங்குவதாக கூறி , பல்வேறு டிசைன்களை பார்த்து விட்டு எதுவும் பிடிக்கவில்லை எனக்கூறி சென்றுள்ளனர்.
பின் ஊழியர்கள் நகையை சரிபார்த் தபோது , 4 கிராம் தங்க மோதிரம் காணாமல் போனது தெரிய வந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவுகளை பார்த்த போது , மோதிரம் வாங்குவது போல வந்த இருவர் கைவரிசை காட்டியது தெரிய வந்தது.
இது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்து செம்பியத்தைச் சேர்ந்த இம்தியாஸ்கான் ( வயது 47 ) திருவல்லிக்கேணியை சேர்ந்த முஷீர் அகமது ( வயது 43 ) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 54 கிராம் எடையிலான 18 மோதிரங்களை பறிமுதல் செய்தனர்.
கைதான இருவரும் சென்னையின் பல பகுதிகளில் 15 - க்கும் மேற்பட்ட கடைகளில் நகை வாங்குவது போல நடித்து மோதிர திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.






















