Crime : சென்னையில் நகைகள் கொள்ளை! நகையை அடகு வைத்து கோவையில் மனைவிக்கு வளைகாப்பு..! சிக்கிய திருடன்!
சென்னையில் வீடு புகுந்து கொள்ளையடித்த நகையை அடகு வைத்து. கோவையில் மனைவிக்கு வளைகாப்பு நடத்திய கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையின் முக்கிய நகரங்களில் ஒன்றாக உள்ளது வேளச்சேரி. இங்கு அமைந்துள்ளது வீனஸ் காலனி. இந்த காலனியில் உள்ள 2வது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன். வயது 70. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது வீட்டில் உள்ள பீரோவில் இருந்த 80 சவரன் நகைகள் மற்றும் ரூபாய் 1 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதைக்கண்டு சீனிவாசன் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதையடுத்து, சீனிவாசன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, அடையாறு காவல் துணை ஆணையர் மகேந்திரன் உத்தரவின் பேரில், கிண்டி காவல் உதவி ஆய்வாளர் புகழ்வேந்தன் தலைமையில் வேளச்சேரி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கண்ணன், உதவி ஆய்வாளர் இந்துமதி ஆகியோர் கொண்ட தனிப்படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. மற்றும் பிற தடயங்களின் அடிப்படையில் முத்துக்கிருஷ்ணன் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. 32 வயதான முத்துக்கிருஷ்ணன் கோவையைச் சேர்ந்தவர். மேலும், அவர் முன்னாள் குற்றவாளி ஆவார். அவர் மீது சில வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதையடுத்து, தனிப்படை போலீசார் கோவை விரைந்தனர். அவர்கள் கோவையில் தங்கியிருந்த முத்துக்கிருஷ்ணனைப் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், சென்னை, வேளச்சேரியில் உள்ள சீனிவாசன் வீட்டில் கொள்ளையடித்ததை முத்துக்கிருஷ்ணன் ஒப்புக்கொண்டார். மேலும், கொளத்தூரில் உள்ள காவல்நிலையத்தில் இவர் மீது நிலுவையில் உள்ள வழக்கு ஒன்று தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது சீனிவாசன் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
மேலும், முத்துக்கிருஷ்ணன் தான் கொள்ளையடித்த நகையை அடகு வைத்து நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவிக்கு வளைகாப்பு நடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து, முத்துக்கிருஷ்ணனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 56 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 4.5 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது கொள்ளையடித்ததும். கொள்ளையடித்த பணத்தைக் கொண்டு கொள்ளையன் மனைவிக்கு வளைகாப்பு நடத்தியதும் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க : ராமநாதபுரம்: காதலனை கட்டிப்போட்டு கல்லூரி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. விசாரித்த காவலர்களுக்கு அரிவாள்வெட்டு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்