சிறுமி குளிக்கும்போது மொபைல் போனில் போட்டோ எடுத்த நபர் போக்சோவில் கைது
சென்னை கொண்டி தோப்பில் சிறுமி குளிப்பதை படம் பிடித்த நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

குளிப்பதை மொபைல் போனில் படம் பிடித்த நபர்
சென்னை கொண்டித்தோப்பைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர் தன் வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது பக்கத்து வீட்டின் கிரில் கேட் வழியாக சிறுமி குளிப்பதை ஒருவர் மொபைல் போன் மூலம் படம் பிடித்துள்ளார். அதை பார்த்த சிறுமி மொபைல் போனை அவரிடம் இருந்து பறித்து தன் தாயிடம் கொடுத்து நடந்ததை கூறியுள்ளார். இது குறித்து பூக்கடை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. விசாரித்த போலீசார் சிறுமி குளிப்பதை படம் பிடித்த ராகேஷ் ( வயது 52 ) என்பவரை பாலியல் வன்கொடுமை குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.
பணியில் இருக்கும் போது அரசு பேருந்து நடத்துனருக்கு திடீர் நெஞ்சு வலி
சென்னை திருவொற்றியூர் ராஜாகடை எழுத்துக்காரன் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் ( வயது 55 ) பேருந்து நடத்துநர். இவர் உயர்நீதிமன்றத்தில் இருந்து திருவொற்றியூர் நோக்கி சென்ற தடம் எண் '56சி' என்ற பேருந்தில் பணியில் இருந்தார். திருவொற்றியூர் பணிமனை அருகே பேருந்து வந்த போது நடத்துநர் ரமேஷ் - க்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். ஓட்டுநர் பாண்டியன் அவரை திருவொற்றியூர் ஆகாஷ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். முதலுதவி சிகிச்சைக்கு பின் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தார். தகவலறிந்த திருவொற்றியூர் போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரமேஷுக்கு லதா என்ற மனைவியும் 15 வயதில் மகளும் உள்ளனர்.
பணம் ஏற்றி சென்ற வேன் , தடுப்பில் மோதி கவிழ்ந்தது.
சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் உள்ள இயந்திரங்களில் பணம் நிரப்ப ஒன்றரை கோடி ரூபாயுடன் வேன் சென்றது. சூளைமேடு நமச்சிவாயபுரம் பாலம் அருகே வேன் சென்ற போது பெரிய கல் மீது ஏறியதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை மையத் தடுப்பில் மோதி கவிழ்ந்தது. அப்போது வேனிற்கு பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த ஷோபனா ( வயது 48 ) என்பவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. வேன் ஓட்டுநர் கிஷோரும் காயமடைந்தார். அண்ணா நகர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கவிழ்ந்து கிடந்த வேனை மீட்டனர். மேலும், அதில் இருந்த ஒன்றரை கோடி ரூபாயை துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ படை வீரர் பாதுகாப்புடன் மாற்று வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தொடர் விசாரணை நடக்கிறது.






















