மேலும் அறிய
‘நான் செயின் ஸ்மோக்கர்' ..விமானத்தில் சிகரெட் பிடித்த இளைஞரால் நடுவானில் பரபரப்பு
நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்திற்குள் தொடர்ந்து புகை பிடித்ததால், விமானம் சென்னையில் தரை இறங்கியதும், சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்ட நபர்..
![‘நான் செயின் ஸ்மோக்கர்' ..விமானத்தில் சிகரெட் பிடித்த இளைஞரால் நடுவானில் பரபரப்பு Chennai Airport indigo Airlines passenger flight from Saudi Arabia to Chenna passenger smoke inside the plane TNN ‘நான் செயின் ஸ்மோக்கர்' ..விமானத்தில் சிகரெட் பிடித்த இளைஞரால் நடுவானில் பரபரப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/01/9dd54b75ffa91306d35eb61669556ba01680328419608539_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விமானம் (மாதிரப்படம்)
Source : PTI
சிகரெட் புகை வாடை
சவுதி அரேபியாவில் உள்ள தமாமிலிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 164 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. விமானம் நடு வானில் பறந்து கொண்டு இருந்தபோது, அந்த விமானத்தில் பயணம் செய்த, நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த வைத்தியநாதன் (37) என்ற பயணி, அடிக்கடி தனது இருக்கையில் இருந்து எழும்பி, விமானத்தின் கழிவறைக்கு சென்று வந்தார். அவர் ஒவ்வொரு முறை போய்விட்டு வரும்போதும் அவரிடம், சிகரெட் புகை வாடை வீசியது.
நான் செயின் ஸ்மோக்கர்
இதை அடுத்து சக பயணிகள் அவரிடம், விமானத்திற்குள் புகை பிடிக்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. ஆனால் நீங்கள் விதியை மீறி தொடர்ந்து கழிவறைக்கு சென்று புகை பிடித்து வருவது சரியா? என்று கேட்டனர். அதற்கு அந்தப் பயணி, நான் செயின் ஸ்மோக்கர். என்னால் புகை பிடிக்காமல் இருக்க முடியாது. எனவே நான் என்னுடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருக்கும் சிகரெட் மற்றும் லைட்டரை, விமானத்தின் கழிவறையில் தான் உபயோகப்படுத்துகிறேன், அதில் உங்களுக்கு என்ன சிரமம்? என்று கேட்டார். ஆனால் சக பயணிகள், சிகரெட் லைட்டரை விமானத்திற்குள் உபயோகப்படுத்துவது மிகப் பெரும் ஆபத்து. இதனால் விமானத்தில் பயணிக்கும் 164 பயணிகளுக்கும் பேராபத்தை உருவாக்கும் என்று எச்சரித்தனர். இதனால் சக பயணிகளுக்கும், செயின் ஸ்மோக்கர் வைத்தியநாதனுக்கும் இடையே விமானத்திற்குள் கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டன. இதை அடுத்து விமான பணிப்பெண்கள், பயணிகளிடம் வந்து விசாரித்தனர். அப்போது பயணிகள் இந்தப் பயணி தொடர்ச்சியாக எழுந்து சென்று புகை பிடித்து வருவதை கூறினர்.
போலீசில் ஒப்படைப்பு
இதை அடுத்து விமான பணிப்பெண்கள், விமான கேப்டனுக்கு தகவல் கொடுத்தனர். உடனே விமான கேப்டன் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பு கொண்டு, பாதுகாப்பு அதிகாரிகளை தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார். அதன் பின்பு நேற்று முன்தினம் இரவு விமானம் சென்னையில் தரை இறங்கியதும், விமான பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்துக்குள் ஏறி, விமான பாதுகாப்பு சட்டத்துக்கு முரணாக, விமானத்துக்குள் புகை பிடித்த பயணி வைத்தியநாதனை பிடித்து விசாரித்தனர். அப்போதும் அவர் நான் செயின் ஸ்மோக்கர், என்னால் புகை பிடிக்காமல் இருக்க முடியாது என்பதை திரும்பவும் கூறினார். இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், பயணி வைத்தியநாதனை குடியுரிமை சோதனை, சுங்கச் சோதனை, ஆகியவற்றை முடிக்க செய்து, பாதுகாப்புடன் அழைத்துச் சென்று, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். அதோடு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம், முறைப்படி அந்த பயணி மீது போலீசில் புகார் செய்தது.
வழக்குப் பதிவு
இதை அடுத்து சென்னை விமான நிலைய போலீசார், பயணி வைத்தியநாதன் மீது, விமான பாதுகாப்பு சட்டத்தை மீறியது, சக பயணிகளுக்கு இடையூறு விளைவித்தது, வானில் பறந்து கொண்டிருந்த விமானத்திற்கு பேராபத்தை விளைவிக்கும் செயல் செய்தது, உள்ளிட்ட சில பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர். அதோடு அந்தப் பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion