செங்கல்பட்டு : தோழியுடன் சண்டை.. விரக்தியில் சட்ட கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
நெருங்கிய தோழி கடந்த சில நாட்களாக மாணவியுடன் பேசாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது
செங்கல்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு சட்டக்கல்லூரியில் வெளிமாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் 2-ம் ஆண்டு பயின்றுவரும் தஞ்சாவூர் மாவட்டம் திருவாதூர் கிராமத்தை சேர்ந்த சிவபிரகாசம் என்பரவது மகள் கவிபிரியா வயது (19) என்பவர் சட்டக்கல்லூரி விடுதியில் தனது அறையில் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
கவிபிரியாவை நீண்டநேரமாக காணவில்லை என்பதால் அவரது அறைக்கு சென்று சக மாணவிகள் பார்த்தபோது அறையின் உள்ளே தூக்கிட்டு தொங்கியபடி கிடந்துள்ளார். சக மாணவிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மாணவி கவிபிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கவி பிரியாவின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைக்க உள்ளனர்.
மேலும் தற்கொலை முயற்சி குறித்து செங்கல்பட்டு தாலுகா போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி உயிரிழந்தது குறித்து தகவலறிந்த சக மாணவ மாணவியர்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் குவிந்ததால் சற்றுநேரம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களுடன் பேசியதைத் தொடர்ந்து உடனடியாக அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, தனது நெருங்கிய தோழி ஒருவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கடந்த சில நாட்களாகவே மாணவி மன அழுத்தத்தில் இருந்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற நாளன்று கூட மாணவி தனது சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளார். ஆனால் பேசாமல் இருந்து வந்ததால் விரக்தியில் இருந்த மாணவி, செய்வதறியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். மாணவியின் உயிரிழப்புக்கு வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் : 104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060).