Chengalpattu juvenile home: செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் ஆசிரியர், மாணவர் மோதல்; தப்பி சென்ற 5 சீறார்கள்-நடந்தது என்ன ?
படுகாயமடைந்த ஆசிரியர்கள் இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறார் கூர்நோக்கு இல்லம் ( chengalpattu juvenile home )
5 சிறார்கள் தப்பி ஓடியுள்ளனர்
செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து 5 சிறார்கள் தப்பி ஓடியுள்ளனர். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே அரசினர் கூர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கூர்நோக்கு இல்லத்தில் சுமார் 43 சிறுவர்கள் நேற்று வரை இருந்தனர். இந்தநிலையில் இன்று அதிகாலை 5 சிறுவர்கள் சுவர் ஏறி குதித்து தப்பியோட முயற்சி செய்துள்ளனர். அச்சமயம் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ஆசிரியர்கள், 5 சிறுவர்களை தடுக்க முயன்றனர். இதில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து ஆசிரியர்கள் குணசேகரன், பாபுவை செங்கல்லால் தாக்கிவிட்டு சிறுவர்கள் தப்பி ஓடியுள்ளனர். படுகாயமடைந்த ஆசிரியர்கள் இருவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய 5 சிறுவர்களை தேடும் பணியில் செங்கல்பட்டு நகர போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக செங்கல்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரணத்தை கண்டுபிடிக்க கோரிக்கை
அவ்வப்பொழுது இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதை ஆகியுள்ளதால் உடனடியாக இதுகுறித்து விசாரணை நடத்தி இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி ஏபிபி நாடு செய்தி இணையதளத்தில், செங்கல்பட்டு இல்லத்தில் பல்வேறு மர்மங்கள் நடைபெறுகிறது என்பது குறித்து ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருவதால் உடனடியாக இது குறித்து, சமூக நலத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டிருந்தது, என்பது குறிப்பிடத்தக்கது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.