செங்கல்பட்டில் சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு ! நாயை குறி வைத்தபோது நேர்ந்த கொடூரம்
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே, நாயை சுட முயன்று குண்டு தவறுதலாக சிறுவன் மீது பட்டதில் தலையில் காயம் ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த கொக்கரந்தாங்கல் கிராமம், காந்தி தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (55). காந்தி தெரு பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, அப்பகுதியில் நாய் ஒன்று அடிபட்டு கஷ்டப்படுவதை பார்த்து வந்துள்ளார். குறிப்பாக அந்த நாய்க்கு அடிபட்ட பிறகு, அதை சரி செய்ய அவர் வைத்தியம் பார்த்ததாக கூறப்படுகிறது.
நாயை கருணை கொலை
இருந்தும் அந்த நாய்க்கு ஏற்பட்ட புண் சரியாகாமல், ஒரு மாதத்திற்கு மேலாக புண் அதிகமாகி புழு வைத்துள்ளது. இதைப் பார்த்த வெங்கடேசன் அந்த நாய் அவதிப்படுவதை பார்த்து, வேதனை அடைந்துள்ளார். இதனால் அந்த நாயை கருணை கொலை செய்ய வேண்டும் என வெங்கடேசன் முடிவெடுத்துள்ளார்.
இதனால் செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அடுத்த, சிறுகரணை கிராமத்தைச் சேர்ந்த, நரிக்குறவர் காலணியை சேர்ந்த ரவி என்பவரின் மகன் சரத்குமார் (37) என்பவரை அணுகியுள்ளார். சுமார் ஒரு மாதமாக பலத்த காயத்துடன் புழு பிடித்து சுற்றிக்கொண்டு இருந்த நாயை வெங்கடேசன் சுட்டுக் கொள்ள சரத்குமாரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுவன் மீது துப்பாக்கி சூடு
நாயை சுட அழைத்து வந்து சுட, சொன்னதின் பேரில் நரிக்குறவர் சரத்குமார் நாயை சுட நாய் தப்பித்தும் துப்பாக்கியின் குண்டு சுவற்றில் பட்டு, பின்பு அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன், குறளரசன் என்ற சிறுவன் மீது பட்டுள்ளது. சிறுவனின் தலையிலும் பட்டு பின்பக்க தலையில் பட்டதால் சிறுவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக, சிறுவனை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுவனுக்கு அங்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இருவர் கைது
இது தொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் கொக்கரந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த முருகன் (47) என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் குறித்து புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இது தொடர்பாக வெங்கடேசன் மற்றும் சரத்குமார் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் செய்யூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





















