Tea seller: ஐபிஎஸ் அதிகாரி போல நடித்து பல லட்சம் பறித்த டீ விற்பனையாளர்....பொறி வைத்து பிடித்த காவல்துறை
டெல்லியின் முகர்ஜி நகரில் ஐ.பி.எஸ் அதிகாரி போல் நடித்து 50-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றிய டீ விற்பனையாளர் கைது செய்யப்பட்டார்.
விகாஸ் கௌதம் என்பவர், டெல்லியில் உள்ள பிரபலமான ஐ.ஏ.எஸ் பயிற்சி வழங்கும் நிறுவனத்தின் முன்பு டீ கடை நடத்தி விற்பனை செய்து வந்துள்ளார். அவர் சமூக வலைதளத்தில் கணக்கை உருவாக்கி, ஐபிஎஸ் அதிகாரி போல காட்டியுள்ளார்.
போலி கணக்கு
இவர் டெல்லியின் முகர்ஜி நகர் பகுதியில் பெண்கள் மற்றும் சிவில் சர்வீஸ் படிப்பவர்களிடையே தான் ஒரு ஐபிஎஸ் என்பது போல சமூக வலைதளத்தில் நம்ப வைத்துள்ளார். அவர் சமூக ஊடக கணக்கில் 2020 பேட்ச் ஐபிஎஸ் அதிகாரி (உ.பி கேடர்) போல காண்பித்துள்ளார்
View this post on Instagram
இதையடுத்து, பலரையும் நம்ப வைத்த விகாஸ் கௌதம், 50-க்கும் மேற்பட்டவர்களை ஏமாற்றியுள்ளார். அவர்களிடமிருந்து 14 லட்சத்துக்கும் அதிகமான பணத்தையும் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட விகாஸ் கவுதம் என்பவர் 30 வயதானவர் என்றும் எட்டாம் வகுப்பு பாதிவரை தான் கல்வி கற்றதாககவும் கூறப்படுகிறது.
புகார்
இந்நிலையில் விகாஸ் கவுதமிடம் ஏமாந்த மருத்துவர் ஒருவர், கடந்த டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தீவிர விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், விகாஸ் கவுதமை கைது செய்தனர். இது குறித்து மருத்துவர் தெரிவிக்கையில், போலி ஐடியை இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் வைத்திருந்த நபர், தனது தாயின் சிகிச்சைக்காக பணம் தேவை என்று கூறி போன்பே மூலம் ரூ .25,000 டெபாசிட் செய்யுமாறு கேட்டார் என் தெரிவித்தார். பின்னர், தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்து, புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
கைது
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில் விகாஸ் கௌதம், விகாஸ் யாதவ் என்ற என்ற பெயரில் போலி ஐடியை இன்ஸ்டா மற்றும் முகநூலில் உருவாக்கியுள்ளார். அதை வைத்து பலரிடம், தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரி என ஏமாற்றி , அவசரத்துக்காக பணம் தேவை என கூறி ஏமாற்றியுள்ளார். இதையடுத்து, பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், மின்னணு கண்காணிப்பு அடிப்படையில் விசாரணை நடத்தி கைது செய்துள்ளோம் என தெரிவித்தனர்.
இந்நிலையில், டெல்லியில் டீ கடை நடத்தும் ஒருவர், ஐபிஎஸ் அதிகாரி போல ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.