காவல் ஆய்வாளர் போல் நடித்து மூதாட்டியிடம் வழிப்பறி - சிசிடிவி காட்சி சிக்கியதால் பரபரப்பு
"போலீஸ் போல நடித்து மூதாட்டியை ஏமாற்றி 14 சவரன் நகைகள் கொள்ளை சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு"
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் வேலம்மாள்.63. இவர் நெல்லையில் உள்ள தனது மகள் வீட்டில் (கணவர் வெளிநாட்டில் இருப்பதால்) அவருக்குத் துணையாக வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மகள் வீடு உள்ள என்ஜிஓ காலனி மர்பி நகர் பகுதியில் இருந்து ஜெபா கார்டன் நான்கு சாலை சந்திப்பு பகுதிக்கு தோசை மாவு வாங்குவதற்காக நடந்து சென்று உள்ளார். மூதாட்டி நடந்து வருவதை கவனித்த இருநபர்கள் அவரை நோட்டமிட்டு நகைகளை கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் பின் தொடர்ந்து உள்ளனர். ஒருவன் இருசக்கர வாகனத்தில் அருகில் நின்று கொள்ள மற்றொருவன் மூதாட்டி அருகில் சென்று காவல்துறை ஆய்வாளர் உங்களை அழைக்கிறார் என கூறி அழைத்து வந்துள்ளார்.
இருசக்கர வாகனத்தின் அருகில் காவல் ஆய்வாளர் போன்று நின்ற நபர் மூதாட்டியிடம் செயின், வளையல் போன்ற தங்க நகைகளை அணிந்து கொண்டு வெளியே வரக்கூடாது. பாதுகாப்பாக இருக்காது என அறிவுரை கூறுவது போல நடித்துள்ளார். மேலும் நகைகளை கழட்டி ஒரு பேப்பரில் வைத்து பையில் வைத்து செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். அவன் கூறுவது அனைத்தும் உண்மை என நம்பிய மூதாட்டி நகையை கழற்றி தான் கொண்டுவந்த கைப்பைக்குள் போட்டுள்ளார். கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி கைகளிலிருந்த வளையல் ஆகியவற்றை கழற்றிப் போட்ட நிலையில் அவரின் கவனத்தை திருப்பி பேப்பரில் மடித்து வைத்திருந்த பொட்டலத்தை பைக்குள் போட்டு விட்டு நகைகளை திருடியுள்ளனர். அதோடு விடாமல் காதில் அணிந்திருந்த கம்மலையும் கழட்ட கூறிய நிலையில் மூதாட்டி அதற்கு மறுப்பு தெரிவித்து தான் அங்கிருந்து செல்வதாக கூறியுள்ளார். பின்னர் 14 சவரன் நகைகளை நூதனமாக திருடிய நபர்கள் மூதாட்டியின் கண்முன்னே இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். அருகில் இருந்த கடைக்கு சென்ற பிறகு மூதாட்டி மடித்து வைத்திருந்த பொட்டலத்தை பார்த்து உள்ளார். அப்போது பொட்டலத்தில் இருப்பது தங்க நகை அல்ல, கல் என்பது மூதாட்டிக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக அவர் கூச்சல் இடவே அருகில் இருந்தவர்கள் நூதனமாக நகை திருடிய போலி காவல்துறையினரை தேடியுள்ளனர். ஆனால் அதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். உடனடியாக இதுகுறித்து மூதாட்டி பெருமாள்புரம் போலீசில் புகார் தெரிவித்தார்.
மூதாட்டி அளித்த புகாரின் அடிப்படையில் 420 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட இருவரையும் தேடி வருகின்றனர். பறிபோன நகையின் மதிப்பு ஐந்து லட்ச ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதனிடையே அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். பின்னர் அதனை கைப்பற்றி தீவிரமாக விசாரணை செய்ததில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அலி மற்றும் அவனுடைய கூட்டாளி ஆகிய இருவர் தான் இந்த நூதன திருட்டில் ஈடுபட்டு உள்ளனர் என காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக அலி மதுரையில் இதுபோன்று கைவரிசை காட்டிய நிலையில் மதுரை போலீசாரால் கைது செய்யப்பட்டு அந்த வழக்குகள் விசாரணையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மூதாட்டியிடம் நூதன வழிப்பறி செய்யும் சிசிடிவி காட்சி
நெல்லையில் போலீஸ் போல நடித்து மூதாட்டியை ஏமாற்றி நூதனமுறையில் 14 சவரன் நகை கொள்ளை, சிசிடிவி காட்சி சிக்கியதால் பரபரப்பு @abpnadu @imanojprabakar @SRajaJourno pic.twitter.com/eY31FYPHGo
— Revathi (@RevathiM92) January 5, 2022
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் காவல்துறையால் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “சாலையில் நடந்து வரும் மூதாட்டியிடம் பேச்சு கொடுத்து அவரை அழைத்துச் சாலையோரம் நின்று பேச்சு கொடுக்கின்றனர். பின்னர் நகையை கழட்டி அவர் பையில் போடுவது போல் நகையை பேப்பரில் சுற்றி வைக்க வற்புறுத்துகின்றனர். அதனை மூதாட்டி செய்யவே கம்மலையும் கழட்ட சொல்லி வற்புறுத்துகின்றனர். அதனை மறுத்த மூதாட்டி அங்கிருந்து நகரவே பின்னர் அந்தப் பகுதியிலிருந்து அவர்களும் இரு சக்கர வாகனத்தில் வெளியேறுவது என அனைத்து காட்சிகளும் பதிவாகியுள்ளது. திருநெல்வேலி மாநகர காவல்துறையினர் வேர்களைத் தேடி என்ற அமைப்பின் மூலம் வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களை காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்” எனத் தெரிவித்தனர்.
இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் வயதான பெண்களை குறிவைத்து தொடர்ந்து அரங்கேறுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்வதோடு இதுபோன்ற சம்பவங்கள் தொடரா வண்ணம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.