இலங்கை ரவுடி அங்கொட லொக்கா விவகாரம் ; கூட்டாளிகளை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி மனுத்தாக்கல்
பிரதீப் சிங் என்ற பெயரில் மேற்குவங்கம் மற்றும் மதுரை முகவரிகளில் போலியான ஆதார் அட்டையை கொடுத்து உடலை பெற்றனர்.
இலங்கையை சேர்ந்த போதை பொருள் கடத்தல் மன்னன் லசந்தா சந்தனா என்கிற அங்கொட லொக்கா. 35 வயதான இவர் மீது பல்வேறு கடத்தல் வழக்குகள் இலங்கையில் உள்ளது. இலங்கையில் கடத்தல் கும்பல்களுடையே 2017 ல் நடைபெற்ற மோதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியாவில் அங்கொட லொக்கா தலைமறைவாக இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு அங்கொட லொக்கா இறந்து கொலை செய்யப்பட்டதாகவும், மதுரையில் எரிக்கப்பட்டதாகவும் இலங்கை ஆன்லைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்நிலையில் இலங்கை அரசு சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் மூலமாக கோவை மாநகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தது. இதனையடுத்து கோவை மாநகர போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக கடந்தாண்டு ஜீலை மாதம் கோவை பீளமேடு காவல் நிலைய போலீசார் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமசுந்தரி, அங்கொட லொக்காவின் காதலி அமானி தாஞ்ஞி, ஈரோட்டை சேர்ந்த தியானேஷ்வரன் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் கடந்த 2020 ம் ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி கோவையில் அங்கொடா லக்கா மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், பிரதீப் சிங் என்ற பெயரில் மேற்குவங்கம் மற்றும் மதுரை முகவரிகளில் போலியான ஆதார் அட்டையை கொடுத்தும், சிவகாமசுந்தரி சகோதரி போலவும், அமானி தாஞ்ஞி காதலி போலவும் நாடகமாடி உடலை பெற்றுள்ளனனர். இதையடுத்து மதுரைக்கு எடுத்துச் சென்று மின்மயானத்தில் எரியூட்டியுள்ளனர். மேலும் சிவகாமசுந்தரி, அம்மானி தாஞ்ஞி, தியானேஸ்வரன் ஆகியோர் அங்கொட லொக்க இலங்கையில் இருந்து தப்பி வரவும், கோவையில் தங்கியிருக்கவும் உதவி செய்ததும் தெரியவந்துள்ளது.
அங்கொடா லொக்க மரணம் தொடர்பாக வழக்கு சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அங்கொட லொக்காவின் கூட்டாளிகள் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பதுங்கி இருப்பதாக சிபிசிஐடி காவல் துறையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் நளின் சதுரங்கா என்ற சனுக்கா தனநாயகா மற்றும் கோபாலகிருஷ்ணன் ஆகிய இருவரை கைது செய்தனர். இதையடுத்து இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினர் முடிவு செய்தனர். இலங்கையில் இருந்து அங்கொட லொக்கா தப்பி வந்தது எப்படி? எங்கெங்கு தங்கியிருந்தார்? அவருக்கு உதவி செய்தது யார்? உள்ளிட்டவை குறித்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். சிறையில் உள்ள இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, கோவை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது.